காவிரிக்கரை சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

 

ஈரோடு, ஜூலை 10: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை சமேத சோழீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு, கன்னிமூல கணபதி, வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமண்யர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள், கஜலட்சுமி தாயார், சுந்தராம்பிகை சமேத சோழீஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்தது. இதையடுத்து கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கியது.

தொடர்ந்து முதல் கால யாக பூஜையும், 7ம் தேதி மண்டப பூஜை, வேதிகார்ச்சனை, விமான கோபுரங்களில் கலச பிரதிஷ்டை, பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டு, இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜைகளும், சோழீஸ்வரருக்கு பஞ்சமுக ருத்ர திரிசதி அர்ச்சனை நடந்தது. நேற்று மூலஸ்தான மூர்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டு, சிவாகம பாராயணம், நான்காம், ஐந்தாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 6ம் கால பூஜையும், காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம், கலசங்கள் ஆலயம் சுற்றி எடுத்து வரப்பட்டது.

காலை 8.30 மணிக்கு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் விமானத்திற்கும், ராஜ கோபுரத்திற்கும், தொடர்ந்து, சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி, இணை ஆணையர் பரஞ்ஜோதி, கோயில் செயல் அலுவலர் முத்துசாமி, அக்னி ஸ்டீல் நிர்வாக இயக்குநர் சின்னசாமி, கோயில் திருப்பணிகளை மேற்கொண்ட சத்தியமூர்த்தி, மாநகர பொறியாளர் விஜயகுமார் மற்றும் ஈரோடு, பள்ளிபாளையம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சோழீஸ்வரரை வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

The post காவிரிக்கரை சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: