உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு செய்த பின் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படும்: சுந்தர் எம்எல்ஏ உறுதி

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேல்தளத்தின் சிமென்ட் பூச்சு உடைந்து விழுந்ததையடுத்து, எம்எல்ஏ சுந்தர் ஆய்வு செய்தார். பின்னர், பழுதடைந்த கட்டிடங்களை அகற்றிவிட்டு, புதியதாக கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உத்திரமேரூரில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 1,294 மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பள்ளியில் பெரும்பாலான வகுப்பறை கட்டிடங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால், கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக 12ம் வகுப்பறை கட்டிடத்தில் மேல் தளத்தில் உள்ள சிமென்ட் பூச்சிகள் திடீரென உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறையில் மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், பள்ளிக்கு நேரில் சென்று வகுப்பறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பாதுகாப்போடு மாணவிகளுக்கு வகுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், பள்ளி தலைமை ஆசிரியை ராஜீவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post உத்திரமேரூர் அரசு மகளிர் பள்ளியில் ஆய்வு செய்த பின் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்டப்படும்: சுந்தர் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.

Related Stories: