புதர்மண்டிக்கிடக்கும் சோழவரம் ஏரி கால்வாய்: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் புதர் மண்டிக்கிடப்பதால் அதை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் மழைக்காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைப்பது வழக்கம். மீதம் உள்ள உபரிநீர் அணைக்கட்டிலிருந்து வெளியேறி கடலுக்கு செல்லும்.

மேலும் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு அது சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் செடி கொடிகள் படர்ந்து கால்வாய் முழுவதும் புதர்கள் மண்டிக்கிடக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த கால்வாயில் அக்கம் பக்கம் உள்ள வீடு, கடை, ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கால்வாயில் கலந்து தேங்கி நிற்கிறது. எனவே இந்த கால்வாயில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post புதர்மண்டிக்கிடக்கும் சோழவரம் ஏரி கால்வாய்: சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: