எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்: சரத் பவார் பேட்டி 

டெல்லி: எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் உட்பட 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவசேனா-பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்தனர். அஜித் பவார் துணை முதல்வராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டனர். 53 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களில் 40 பேர் ஆதரவு தங்களுக்கு உள்ளதாக கூறியுள்ள அஜித்பவார்கட்சியும் அதன் சின்னமும் தங்களுக்கே உரியது என்றும் தெரிவித்தார். இந்த நிலையில், அணி மாறிய அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரையும் தகுதி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகரிடம் சரத்பவார் தரப்பு மனு அளித்துள்ளது.

இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தனித்தனியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில் மும்பை நரிமன் பாய்ண்ட் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 17 எம்.எல்.ஏ.க்களும், அஜித் பவார் தலைமையில் மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்களும் ஆஜராகினர். இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்று வரும் பலப்பரீட்சை மராட்டிய அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கான உரிமையை தங்களிடம் வழங்க வேண்டும் என அஜித் பவார் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்; எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; கட்சியின் சின்னம் நம்முடன் உள்ளது, அது எங்கும் செல்லவில்லை. தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம். தடைகள் பல இருந்தாலும் அவற்றை கடந்து முன்னேற்ற பாதையில் நடைபோட வேண்டும். அஜித்பவாருக்கு ஏதேனும் பிரச்னை இருந்திருந்தால் அவர் என்னிடம் பேசி இருக்கலாம். அஜித் பவார் எடுத்த முடிவு ஜனநாயக விரோதமானது. எங்களுக்கு அதிகார பசி இல்லை; மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.

NCP கட்சியை ஊழல்கட்சி என கூறிய பாஜக, தற்போது அஜித்பவாருடன் கூட்டணி வைத்தது ஏன்?. கட்சி சின்னம் எங்களிடம் உள்ளது; மக்களும், கட்சியினரும் எங்களுடன் இருக்கின்றனர் எனவும் கூறினார்.

The post எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக உழைப்போம்: சரத் பவார் பேட்டி  appeared first on Dinakaran.

Related Stories: