சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி.!

சென்னை: சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, முதல்வருக்கு உடல் சோர்வு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டம் முடிந்து பிற்பகல் 1.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டார். உடல் சோர்வு மற்றும் மாதாந்திர மருத்துவ பரிசோதனைகளுக்காக முதல்வர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு மாலையில் சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைகள் முடிந்து நாளை (ஜூலை 4) வீடு திரும்புவார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான சிகிச்சைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி.! appeared first on Dinakaran.

Related Stories: