தெலங்கானாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சந்திரசேகர ராவை ரிமோட் மூலம் இயக்குகிறார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திருமலை: சந்திரசேகர ராவை ரிமோட் மூலம் பிரதமர் மோடி இயக்குகிறார் என தெலங்கானாவில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். தெலங்கானா மாநிலம், கம்மம் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனகர்ஜனை கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய ஒற்றுமை யாத்திரை மூலம் நாட்டை ஒருங்கிணைக்க முயற்சித்தேன். அந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் முழு ஆதரவு கிடைத்தது. இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக தெலங்கானாவுக்கு வந்தபோது மக்களின் பல பிரச்னைகளை கேட்டும், நேரில் பார்த்தும் தெரிந்து கொண்டேன்.

முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அவர் மன்னராட்சி செய்து கொண்டிருக்கிறார். மாநிலத்தின் அனைத்து துறைகளிலும் சுரண்டல் நடந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் வரவில்லை. மாநிலத்தின் சொத்துக்கள் அழிந்து, விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கிய முதல்வர் சந்திரசேகர ராவை ரிமோட் மூலம் பிரதமர் மோடி இயக்குகிறார். மக்கள் நினைப்பது ஒன்று என்றால், பிஆர்எஸ் அரசு செய்வது இன்னொன்றாக உள்ளது. தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்கவில்லை.

கம்மம் மாவட்டம் காங்கிரஸின் கோட்டை. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இங்குள்ள மக்கள் உள்ளனர். இந்திரம்மாவின் ராஜ்ஜியம் வர வேண்டும் என்பது மலைவாழ் மக்களின் விருப்பமாக உள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. அவ்வாறு ஆட்சிக்கு வந்ததும், முதியோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இதில் பிஆர்எஸ் கட்சியின் முன்னாள் எம்பி ஸ்ரீனிவாஸ் ரெட்டி உட்பட ஏராளமானோர் காங்கிரசில் இணைந்தனர்.

The post தெலங்கானாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் சந்திரசேகர ராவை ரிமோட் மூலம் இயக்குகிறார் பிரதமர் மோடி: ராகுல்காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: