உலக கோப்பையிலிருந்து வெளியேற்றம்; அனைத்து வீரர்களும் மோசமாக ஆடினர்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹோப் காட்டம்

ஹராரே: ஒரு நாள் உலகக் கோப்பை தகுதி சுற்றின் ஒரு அங்கமாக இருந்த சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சார்லஸ் 0 (6), சமர்த் ப்ரூக்ஸ் 0 (3) ஆகியோர் அடுத்தடுத்து டக்அவுட் ஆனார்கள். தொடர்ந்து மற்ற டாப் ஆர்டர் வீரர்களும் சொதப்பி ஆட்டமிழந்தனர். நிகோலஸ் பூரனும் 21 (43) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. ஓரளவு தாக்குப்பிடித்த ஜேசன் ஹோல்டர் 45 ரன், ரொமாரியோ செய்பர்ட் 36 ரன் அடித்தனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியில் ஓபனர் கிறிஸ்டோபர் மெக்பிரைட் 0 (1) ஆட்டத்தின் முதல் பந்திலேயே வீழ்ந்தார். இதனைத் தொடர்ந்து மேத்யூ க்ராஸ் 74 (107), பிரண்டன் மெக்முல்லன் 69 (106), முன்சே 18 (13), கேப்டன் பெர்ரிங்டன் 13 (14) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தோற்றதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை 2023 தொடரில், தகுதிச்சுற்றோடு வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறிவிட்டது.

போட்டி முடிந்தப் பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் சாய் ஹோப் கூறியதாவது:- இந்த மைதானத்தில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிதான் வெற்றிபெறும் என்ற நிலை இருந்தது. துவக்கத்தில் அந்த அளவுக்கு பிட்ச் வேகத்திற்கு சாதகமாக இருந்தது. பீல்டிங் விஷயத்தில் எங்கள் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தொடர்ந்து கேட்ச்களை தவறவிட்டோம். யாருமே 100 சதவீத உழைப்பை போடவில்லை. இந்த போட்டியில் மட்டுமல்ல, அனைத்து போட்டிகளிலும் வீரர்கள் மோசமாகவே ஆடினார்கள்.

இன்னமும் 2 போட்டிகள் இருக்கிறது. அதில், வலிமையுடன் கம்பேக் கொடுப்போம் என நம்புகிறேன். இப்போட்டியில் ஸ்காட்லாந்து அணியினர் அபாரமாக செயல்பட்டனர். அனைத்து வீரர்களும் வெற்றிக்காக கடினமாக உழைத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post உலக கோப்பையிலிருந்து வெளியேற்றம்; அனைத்து வீரர்களும் மோசமாக ஆடினர்: வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹோப் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: