தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பதவியில் இருந்து நீக்கம் : ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு நடவடிக்கை!!

பாலசோர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக ஒரு மாதத்திற்கு பின்னர் தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் கடந்த 2ம் தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் உள்ளிட்ட 3 ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி நேரிட்ட கோர விபத்தில் 291 பேர் பலியாகி விட்டனர். சுமார் 1000 பயணிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தின் பின்னணியில் நாசவேலை இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து ரயில்வே வாரியத்தின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு விசாரணை குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பின்னர் தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய பொது மேலாளராக அணில் குமார் மிஸ்ராவை நியமிக்க ஒன்றிய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. முன்னதாக தென்கிழக்கு ரயில்வேயின் ரயில்வே கோட்ட மேலாளர் உள்பட 5 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தென் கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் பதவியில் இருந்து நீக்கம் : ஒடிசா ரயில் விபத்து நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Related Stories: