சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா

*5 மாவட்ட மக்கள் பங்கேற்பு

சோழவந்தான் : சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் நேற்று நடந்த மீன்பிடி திருவிழாவில் 5 மாவட்ட மக்கள் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முதலைக்குளத்தில் பதினெட்டாம்படி கருப்புச்சாமி, கம்பகாமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஊர் கண்மாய் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் கண்மாயில் மீன் குஞ்சுகளை வாங்கி விடுவர்.

இக்கண்மாயில் ஆண்டுதோறும் சமத்துவ மீன்பிடி திருவிழா நடத்தப்படும். இதில், அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் பங்கேற்பர்.நடப்பாண்டில் நேற்று நடந்த சமத்துவ மீன்பிடி திருவிழாவில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய 5 மாவட்ட மக்கள் பங்கேற்றனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் பெரிய கோடாங்கி சொன்னான், பாசனக் கமிட்டி தலைவர் ராமன், பூசாரி செல்வம் மற்றும் கிராமப் பொதுமக்கள்

முன்னிலையில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி வலைகள், கூடைகள், வேட்டி, சேலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கினர். கட்லா, மிருகாள், ரோகு உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த சிறிய மீன்கள் முதல் 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்கள் வரை அள்ளிச் சென்றனர்.இதுகுறித்து பாசனக் கமிட்டித் தலைவர் முதலைக்குளம் ராமன் கூறுகையில், ‘‘பல நூற்றாண்டுகளாக எங்கள் கிராமத்தில் சமத்துவ மீன்பிடி திருவிழாவை நடத்தி வருகிறோம்.

கண்மாயில் தண்ணீர் வற்றியவுடன் ஐந்து மாவட்ட மக்களுக்கு அறிவிப்பு செய்து மீன்பிடி திருவிழாவை நடத்துவோம். இதில் பிடிக்கும் மீன்கள் நோய் தீர்க்கும் மருந்து என்ற ஐதீகம் உள்ளது. பிடிக்கும் மீன்களை யாரும் விற்பனை செய்ய மாட்டார்கள். குடும்பத்திற்கு போக, பாக்கியுள்ளதை உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுப்பர்’’ என்றார்.

The post சோழவந்தான் அருகே முதலைக்குளம் கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: