அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது!: யார், யார் அமைச்சராக செயல்பட வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார்.. சபாநாயகர் அப்பாவு பேட்டி..!!

சென்னை: அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர், யார், யார் அமைச்சராக செயல்பட வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதுதான் ஆளுநரின் வேலை. அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம், அல்லது பதவி விலகுமாறு முதல்வர் அறிவுறுத்தலாம்.

அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது. அமைச்சரவையில் தலையிடும் அதிகாரம், இல்லை என்பதை ஆளுநர் நாலரை மணி நேரத்தில் உணர்ந்து கொண்டுள்ளார். அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என சமீபத்தில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஜோஷியும், அத்வானியும் பதவியில் இருந்து கொண்டு தான் வழக்கை எதிர்கொண்டனர். ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு, நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிடுவார்கள். அமைச்சரவை பரிந்துரையின் அடிப்படையில் ஆளுநர் செயல்பட வேண்டும். அமைச்சர் நீக்கம் தொடர்பாக ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிக்க அவசியமில்லை என்று கூறினார். மேலும் ஜனநாயக நாடு என அரசியல் சாசனத்தில் உள்ளது. பொதுவெளியில் மதசார்புடைய நாடாக பேசுகிறார்கள். கடந்த காலங்களில் அமைச்சரவை பரிந்துரை செய்த பின்பே பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை:

ஆளுநர் ஆர்.என்.ரவி மிகவும் நல்ல மனிதர். ஆளுநரின் உணர்வுகளின் வெளிப்பாடு தான் நேற்றைய அறிவிப்பு. உணர்ச்சிவயப்பட்டு சட்டமன்றத்தில் தேசிய கீதத்துக்கு கூட ஆளுநர் எழுந்து நிற்கவில்லை. உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காமல், பொறுப்புணர்வுடன் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு அறிவுரை வழங்கினார்.

The post அமைச்சரை நீக்கும் உரிமை ஆளுநருக்கு கிடையாது!: யார், யார் அமைச்சராக செயல்பட வேண்டும் என்பதை முதல்வர்தான் முடிவு செய்வார்.. சபாநாயகர் அப்பாவு பேட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: