அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா?: கர்நாடக பாஜ முன்னாள் அமைச்சர் காட்டம்

பெங்களூரு: அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா, எடியூரப்பாவுக்கு சல்யூட் அடித்தவர். பெங்களூருவில் கர்நாடக பாஜ தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் பாஜ அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்யா காட்டமாக தெரிவித்துள்ளார். தாவணகெரே மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் எம்.பி.ரேணுகாச்சார்யா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் படுதோல்விக்கு மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தான் காரணம். அவர், தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். வீரசைவ லிங்காயத், ஒக்கலிகா, ஹலுமாதா, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்கும் திறன் உள்ளவரை மாநிலங்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நான் கட்சிக்கு எதிராக பேசவில்லை. எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது பெரிய தவறு என்று கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், மக்கள் பேசி வருகின்றனர். அவரது உணர்வுகளை மட்டுமே பகிர்ந்துள்ளேன். எடியூரப்பா மாநிலம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து கட்சியைக் கட்டமைத்துள்ளார். அவருக்கு ஈஸ்வரப்பா, அனந்த்குமார் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்தனர். ஜெகதீஷ் ஷெட்டரும் கட்சிக்காக உழைத்தார். இவ்வளவு முக்கியஸ்தர்களை புறக்கணித்ததாலும், சீட்டு கொடுக்காமல் அவமானப்படுத்தியதாலும் கட்சி படுதோல்வி அடைந்தது. அதே போன்று பெங்களூரு மாநகரில் உள்ள தொகுதிகளில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். கர்நாடக பாஜ தேர்தல் இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவர் ஒரு கிராம பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெற முடியாதவர், அனுபவமற்ற அரசியல்வாதி.

அவர் என்ன பெரிய ஹீரோவா? இங்கு வந்து பாசங்கு காட்டுகிறார். முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பாவுக்கும் பசவராஜ் பொம்மைக்கும் சல்யூட் அடித்த ஒருத்தர் சொல்வதை நாங்கள் கேட்க வேண்டி இருந்தது. ஒரு கார்ப்பரேட் கட்சி போல் கர்நாடக பாஜ செயல்பட்டு வருகிறது. சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதிகளை, காங்கிரஸ் கட்சி அறிவிக்கும் போது, பாஜ தலைவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர், காலதாமதமாக வந்த கட்சி அறிக்கை, மக்களை சென்றடையவில்லை. அதே போன்று கடைசி நேரத்தில் சில இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர், இதுவும் தோல்விக்கு வழிவகுத்தது. வரும் மக்களவை தேர்தலில் மோடியை மீண்டும் பிரதமராகப் பார்க்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அந்த தேர்தலில் போட்டியிட நானும் ஆசைப்படுகிறேன், அதை கட்சிக்கு தெரிவித்துவிட்டேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார்.

The post அண்ணாமலை என்ன பெரிய ஹீரோவா?: கர்நாடக பாஜ முன்னாள் அமைச்சர் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: