ஒடுகத்தூர் அருகே கெங்கையம்மன் சிரசு திருவிழா பலியிட்ட எருமை தலை மீது விளக்கேற்றி வைத்த பக்தர்கள்

*மழை வேண்டி வினோத வழிபாடு

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவில் மழை வேண்டி பலியிட்ட எருமை தலை மீது பக்தர்கள் விளக்கேற்றி வைத்து வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் அருகே ஏ.புதூர் சுப்புநாயுடு பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, இந்தாண்டு கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 23ம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கூழ் ஊற்றும் விழா தொடங்கியது. தொடர்ந்து, 24ம் தேதி காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக நேற்று அம்மன் சிரசுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களின் பெரும் வெள்ளத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெற்றது. அப்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும், அம்மனுக்கு காசு மாலை, வண்ண மலர்களை கொண்டு வந்து பக்தர்கள் வழிபட்டனர்.

காலை 5 மணிக்கு தொடங்கிய ஊர்வலம் மதியம் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. பின்னர், ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட அம்மன் சிரசு கோயிலில் உள்ள சிலை மீது பொருத்தப்பட்டது. அப்போது, எருமையின் தலையை வெட்டி அந்த தலை மீது விளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். மழை வேண்டியும், பஞ்சம் ஏற்படாமல் மக்கள் ஆரோக்கியமாக வாழவும், உலக நன்மைக்காகவும் இதுபோன்ற ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

விழாவில், ஒடுகத்தூர், மராட்டியபாளையம், அகரம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கோயிலில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் பழநிமுத்து தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post ஒடுகத்தூர் அருகே கெங்கையம்மன் சிரசு திருவிழா பலியிட்ட எருமை தலை மீது விளக்கேற்றி வைத்த பக்தர்கள் appeared first on Dinakaran.

Related Stories: