கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட 5 சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் மாட வீதிகளில் பவனி. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை மதியம் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் மற்றும் மார்கழி மாதங்களில் திருவிழா சிறப்பாக நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாதத்தில் ஆரூத்ரா தரிசன விழாவும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது. கோயிலின் சித்தபையில் இருந்த நடராஜர், சிவகாமசுந்தரி பல்வேறு பூஜைகள் முடிந்து தேருக்கு கொண்டு வரப்பட்டது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சுவாமிகளும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வைத்து 4 மாட வீதிகளையும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்னாள் ஏராளமான பக்தர்கள் தரையில் மா கோலமிட்டு வீதிகளை அழகாக்கினர். சிவாச்சாரியார்கள் மற்றும் சிவ பக்தர்கள் வாத்திய கருவிகள் முழங்கிட, சிவ நடனம் ஆடியபடி தேருக்கு முன்பாக வலம் வருகின்றனர். இதுபோல் சிறுவர்கள் மற்றும் சிலம்பாட்ட கலைஞர்கள் பாரம்பரிய சிலம்பாட்டத்தை தேருக்கு முன்பு ஆடியப்படியே வீதிகளில் வலம் வருகின்றனர். இன்று இரவு வரை வலம் வரும் தேர், இரவு நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்படும்.
பின்னர் அங்கு பல்வேறு பூஜைகளும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் மகாபிஷேகமும், அதைத்தொடர்ந்து சித்சபையில் ரகசிய பூஜை, திருவாபரண அலங்காரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. பின்னர் மதியம் 2 மணி அளவில் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் பாலித்து சித்சபைக்கு செல்லும்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர். இன்று தேரோட்ட திருவிழாவையொட்டி பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதனால் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது! appeared first on Dinakaran.