அழகு கொஞ்சும் அலையாத்தி காட்டில் சேதமான நடைபாதை, ஓய்வு குடிலை சீரமைத்து தர வேண்டும்

முத்துப்பேட்டை, ஜூன் 25: முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும். கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. மேலும், கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 11,885,91 எக்டேரில் காணப்பட கூடிய திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவி உள்ளது. காவிரி ஆற்று படுகையின் தென்கோடியில், முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்தி காடுகள் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்கு பகுதியில் துவங்கி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை இந்த அலையாத்திகாடு நீண்டுள்ளது.முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப் பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.

இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய் மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகாக பிரமிக்க வைக்கும். இந்த அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இந்நிலையில் கஜா புயலுக்கு பிறகு அலையாத்திக்காட்டில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு இருந்த நடைப்பாதைகள், குடிகள், டவர்கள், தங்குமிடங்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளை அங்கு இறக்கி விடாமல், படகிலேயே சுற்றி காட்டி விட்டு திரும்ப அழைத்து வந்து விடுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் முத்துப்பேட்டைக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரனிடம், வர்த்தகக் கழக தலைவர் கண்ணன், பொருளாளர் கிஷோர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியாவின் மிகப்பெரிய காடாகும் இங்கு அரிதான லகூன் தீவுகளும் உள்ளன. இந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவித்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. இதனால் அலையாத்திகாட்டை முழுவதும் சுற்றிப்பார்க்க முடியாமல் சுற்றலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர். எனவே அலையாத்திகாட்டிற்குள் சுற்றுலா பயணிகள் வசதிக்கு நடைப்பாதை, தொட்டி பாலம், ஓய்வு எடுக்கும் குடில், ஏறி பார்க்கும் வகையில் டவர், கழிப்பிடம், குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும். மேலும் ஜாம்புவானோடை படகு துறையில் டிக்கெட் கவுண்டர், சுற்றுலா பயணிகள் காத்திருக்க கட்டிடம், கழிப்பிடம், குடிநீர் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் . இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர், விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அழகு கொஞ்சும் அலையாத்தி காட்டில் சேதமான நடைபாதை, ஓய்வு குடிலை சீரமைத்து தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: