2500 போலி பத்திரங்கள் ரத்து: அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

மதுரை: தமிழகம் முழுவதும் 2,500 போலி பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் செட்டிகுளம் மற்றும் சக்கிமங்கலத்தில் நடத்தப்பட்ட பன்னோக்கு மருத்துவ முகாமை வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆவண எழுத்தர்கள், சட்டப்படி பதிவு அலுவலகத்திற்குள் வரக்கூடாது. பதிவு செய்பவர் தவிர யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என்பது விதி. முறைகேடுகள், லஞ்ச குற்றங்களை தவிர்க்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரூ.50 லட்சத்துக்கும் மேல் மதிப்புள்ள இடங்களை முன்கள ஆய்வு செய்வதற்கு பொறியியல் பிரிவில் புதிய இன்ஜினியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்பிறகு அந்த பதிவுகள் தொய்வின்றி நடைபெறும்.

போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தின் கீழ் இதுவரை 14 ஆயிரம் புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 2,500 போலி பதிவுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி ரத்து செய்யப்பட்டுள்ளன. புகார் மனு மீது சம்பந்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக 3 முறை நோட்டீஸ் அனுப்பி, 120 நாட்கள் விசாரணை நடத்தி உரிய முறையில் பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார். ராமநாதபுரத்தில் நடந்த மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசுகையில், அதிமுக ஆட்சியில் பதிவுத்துறை முடங்கி கிடந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்தாண்டு மட்டும் பதிவுத்துறையில் ரூ.25,000 கோடியும், வணிக வரித்துறையில் ரூ.1,032 வருவாய் கிடைத்துள்ளது. இது அரசு நிர்ணயித்துள்ள இலக்கை விட கூடுதல் வருவாய் ஆகும் என்றார்.

The post 2500 போலி பத்திரங்கள் ரத்து: அமைச்சர் பி.மூர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: