திருத்தணி அரசு கலைக்கல்லூரிக்குள் மாணவர்கள் பாதுகாப்புக்காக 50 கண்காணிப்பு கேமராக்கள்: முதல்வர் அதிரடி நடவடிக்கை

திருத்தணி: சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி ஒன்றியம் மேதினாபுரம் பகுதியில் திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசினர் கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பெரும்பாலும் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவியர்கள் படித்து வருகின்றனர். மேலும், கல்லூரியில், 11 இளங்நிலைப் பாடப்பிரிவுகளும் (யுஜி), ஒன்பது முதுநிலைப் பாடப்பிரிவுகளும், (பிஜி), மூன்று ஆய்வியல் நிறைஞர் பட்டப்பாடப்பிரிவுகளும்(எம்.பில்.,) நான்கு முனைவர் பட்டப் பாடப்பிரிவுகளும்(பிஎச்டி) போன்ற பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரியில், ஆண்டுதோறும் குறைந்த பட்சம், 2,800 முதல், 3,000 மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர்.

மாணவர்கள் ஓழுக்கம், கற்றல் திறன், தனித்திறன் ஆகியவற்றை வளர்க்கும் பல்வேறு செயல்திட்டங்களைக் கல்லூரி நிர்வாகம் தற்போது செயல்படுத்தி வருகிறது. மாணவ-மாணவியர் தரமான கல்வி கற்றலுக்கு அடிப்படையாக கல்வி வகுப்பறை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சில ஆண்டுகளாக அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இடையே அடிக்கடி சமூக பிரச்னை மற்றும் முன்விரோதம் காரணமாக அடிதடி, வகுப்புகள் புறக்கணிப்பு மற்றும் ஆர்பாட்டங்கள் நடந்து வருகிறது. இதுதவிர கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு ஆதரவாக, வெளிநபர்களை மாணவர்கள் போல் அழைத்து வந்து கல்லூரியில் கலாட்டா மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, கடந்தாண்டு, கல்லூரி வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் ஐந்து மாணவர்களை, வெளிநபர்கள் முன்விரோதம் காரணமாக வகுப்பறையில் இருந்து வெளியே வரவழைத்து, கத்தியால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தால் கல்லூரியில் பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, ஒரு மாதம் போலீசார் பாதுகாப்புடன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதுதவிர இரு பிரிவு மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும், சாலை மறியல், ஆர்பாட்டம், உள்ளிருப்பு போராட்டம் கடந்தாண்டும் நடந்தது. இதையடுத்து கல்லூரி முதல்வர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீதுதக்க நடவடிக்கை எடுத்தும், மாணவர்கள் மோதல்களை தடுக்கவும், மாணவர்கள் போல் வெளிநபர்கள் வருவதை கண்காணிக்கவும், இந்த கல்லூரியில் உள்ள அனைத்து கட்டடங்கள், வகுப்பறை மற்றும் வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மாணவர்கள் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வந்தார்.

நடப்பு கல்வியாண்டில் சேரும் மாணவர்களுக்கு சீருடை அறிவித்து, அடையாள அட்டையுடன் வரும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவர் என முதல்வர் தீர்மானித்துள்ளார். இதுகுறித்து திருத்தணி அரசு கல்லூரி முதல்வர் பூரணசந்திரன் கூறியதாவது, மாணவ-மாணவியரின் பாதுகாப்பு மற்றும் ஓழுக்கம் ஆகியவற்றை உறுதி செய்யும் நோக்கில் கல்லூரி வளாகத்திற்குள், 50 கண்காணிப்புக் கேமராக்கள் சென்ற வாரம் பொருத்தபட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கல்லூரி வருகை வளைவு தொடங்கி அனைத்து கட்டடங்களிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மாணவ-மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு சமூக விரோதிகளின் நடமாட்டமும் இருக்காது.
மேலும், கல்லூரியில் வெளிநபர்கள் அத்துமீறி நுழைபவர்களை காவல் துறையின் உதவியோடு வெளியேற்றி, தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த, 2023-24ம் கல்வியாண்டில் மாணவ-மாணவியர் பாதுகாப்போடு ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் மாணவ-மாணவியருக்குச் சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது.மாணவர்களிடையோன ஓழுக்கத்தை மேம்படுத்தும். மாணவ-மாணவியர் சீருடை அணிந்தும் அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டும் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவர். சீருடை குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த கூட்டத்திலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளித்துள்ளனர். அதேபோல் அனைத்து மாணவ-மாணவியர் வருகைப்பதிவுகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகைப் பதிவானது உடனுக்குடன், அவர்களது பெற்றோர்களுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என கூறினார்.

The post திருத்தணி அரசு கலைக்கல்லூரிக்குள் மாணவர்கள் பாதுகாப்புக்காக 50 கண்காணிப்பு கேமராக்கள்: முதல்வர் அதிரடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: