விலைவாசி உயர்வு, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பலர் பங்கேற்றனர். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செம்மலை பங்கேற்றார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் அதிமுக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

The post விலைவாசி உயர்வு, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: