தேசிய ஜூனியர் ஹாக்கி ஆனந்த் ஆட்டத்தால் தமிழ் நாடு அபாரம்

ரூர்கேலா: ஒடிஷா மாநிலம் ரூர்கேலாவில் 13வது தேசிய ஜூனியர் ஆடவர் சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டி நடக்கிறது. எப் பிரிவில் உள்ள தமிழ்நாடு தனது முதல் ஆட்டத்தில் 6-1 என்ற கோல் கணக்கில் புதுச்சேரி அணியை வென்றது. தொடர்ந்து நேற்று நடந்த 2வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு, கோவா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்திலேயே தமிழ் நாடு வீரர் ஒய்.ஆனந்த் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். தொடர்ந்து 6வதுநிமிடத்தில் தமிழ் நாடு வீரர் ஆனந்தராஜ் ஒரு கோலடித்தார். மீண்டும் 20வது நிமிடத்தில் ஆனந்த் இன்னொரு கோல் அடிக்க, முதல் பாதியில் தமிழ்நாடு 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

முதல் பாதியில் மட்டுமல்ல, 2வது பாதியிலும் கோவாவின் கோலடிக்கும் முயற்சிகள் பலனிக்கவில்லை. அதே நேரத்தில் அதிரடி ஆட்டக்காரர் ஆனந 36, 40, 48, 58வது நிமிடங்களில் கோல் மழை பொழிந்தார். இடையில் தமிழக வீரர்கள் அரவிந்த் 42வது நிமிடத்திலும், மணி சேகர் 59வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இப்படி தமிழ் நாடு வீரர்கள் கோல் மழை பொழிய தமிழ் நாடு 9-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது. அதில் 6 கோல் அடித்த ஆனந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக நடந்த ஜார்கண்ட்-புதுச்சேரி இடையிலான ஆட்டத்தில், ஜார்கண்ட் 11-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

எப் பிரிவில் தலா 2 ஆட்டங்களில் வென்றுள்ள தமிழ்நாடு, ஜார்கண்ட் அணிகள் காலிறுதியை உறுதி செய்துள்ளன. இந்த 2 அணிகளுக்கும் இடையே கடைசி லீக் ஆட்டம் நாளை நடைபெறுகிறது. அதில் வெல்லும் அணி எப் பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

The post தேசிய ஜூனியர் ஹாக்கி ஆனந்த் ஆட்டத்தால் தமிழ் நாடு அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: