திம்மாபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை திறப்பு: விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு

மதுராந்தகம்: திம்மாபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை திறக்கப்பட்டுள்ளதால், அனைத்து கிராம மக்கள், விவசாயிகள் வரவேற்றுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் திம்மாபுரம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், திம்மாபுரம் ஊராட்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று செயல்படக்கூடிய வாரச்சந்தை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.கெங்காதுரை தலைமை தாங்கினார். துணை தலைவர் வெங்கடேஸ்வரி ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி செயலர் எம்.எஸ்.தயாநிதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் வசந்தா கோகுலகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி பாஸ்கர், ஞானப்பிரகாசம், ஒன்றிய குழு உறுப்பினர் மேகலா வெங்கடேசன், திரைப்பட பின்னணி பாடகர் கானா பாலா, தனியார் பள்ளி நிறுவனர் ஜாய் அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திம்மாபுரம் ஊராட்சியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள வார சந்தையில், இப்பகுதி கிராமப்புறங்களில் விளைவிக்கப்படும் வெண்டை, முருங்கை, பாகற்காய், கீரை வகைகள், வேர்க்கடலை, காராமணி உள்ளிட்ட பயறு வகைகள் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்படும் கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளை உள்ளிட்ட பல்வேறு காய்கறி வகைகளும், வீட்டிற்கு தேவையான பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரச்சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post திம்மாபுரம் ஊராட்சியில் புதிய வாரச்சந்தை திறப்பு: விவசாயிகள், பொதுமக்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: