ரூ.4 லட்சம் மதுபாட்டில் திருடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது: 8 டாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலம்

வீரவநல்லூர்: டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கொள்ளையடித்த நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கூட்டாளியுடன் சேர்ந்து 8 டாஸ்மாக் கடைகளில் அவர் கைவரிசை காட்டியது அம்பலமாகியுள்ளது. நெல்லை மாவட்டம், வீரவநல்லூரை அடுத்த உப்பாத்து காலனியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மே 28ம் தேதி இரவு ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை போனது. கடையில் இருந்த சிசிடிவி கேமராவையும், ஹார்ட்டிஸ்க்கையும் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் களக்காட்டை அடுத்த கடம்போடுவாழ்வு கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரும் நாம் தமிழர் கட்சி மாவட்ட விவசாய பிரிவு நிர்வாகியுமான அழகியநம்பியை (43) போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.82 ஆயிரம் மதிப்பிலான 571 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், களக்காடு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையனுடன் சேர்ந்து 8க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. சூப்பர்வைசர் தாயுமானவர் 47 பெட்டிகள் மதுபாட்டில்கள் கொள்ளை போனதாக கூறிய நிலையில் கைதானவர் 22 பெட்டிகளையே தூக்கி சென்றதாக கூறியுள்ளார். புகாரும் 8 மணி நேரம் தாமதாக கூறப்பட்டுள்ளது. எனவே சூப்பர்வைசரிடமும் விசாரணை நடக்கிறது.

* கட்சி ஸ்டிக்கரால் சிக்கிய நிர்வாகி
டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சல்லடை போட்டு ஆராய்ந்ததில் சந்தேகத்துக்கிடமாக நாம் தமிழர் கட்சி ஸ்டிக்கர் பொருத்திய டாடா சுமோ ஒன்று குறிப்பிட்ட நேரத்தில் போய் வந்து இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து வீட்டிற்கே சென்று அழகியநம்பியை குண்டு கட்டாக தூக்கியுள்ளனர்.

The post ரூ.4 லட்சம் மதுபாட்டில் திருடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது: 8 டாஸ்மாக் கடைகளில் கைவரிசை காட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: