முந்தைய பாஜக அரசு நிறைவேற்றிய மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு..!!

பெங்களூரு: மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. முந்தைய பாஜக அரசு நிறைவேற்றிய மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு வரையான பாடத்திட்டத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவார் பற்றிய பாடத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே கர்நாடகா காங்கிரஸ் கமிட்டி சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமானது முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த கல்வி ரீதியான அனைத்துமே திரும்ப பெறப்படும், அதேபோல இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் பாஜக கொண்டுவந்த நடைமுறைகள் அனைத்தும் மாற்றம் செய்யப்படும் என்பது தான்.

அதன் அடிப்படையில், தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்த உடனேயே அதற்கான முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, கர்நாடகா மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில், பாடப்புத்தகங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவார், சாவர்க்கர் உள்ளிட்ட வலதுசாரி தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். சம்மந்தமுடைய தலைவர்கள், இந்துத்துவா தலைவர்கள் ஆகியோர் குறித்த கருத்துக்கள், பாடங்கள் அனைத்தும் நீக்க முடிவெடுத்துள்ளதாக கர்நாடக கல்வி அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்துள்ளார்.

ஆண்டி கன்வெர்சன் லா என்று சொல்லக்கூடிய கட்டாய மத மாற்றம் தடுப்பு சட்டத்தை முந்தைய பாஜக அரசு கொண்டுவந்திருந்தார்கள். கர்நாடகா மட்டுமின்றி பாஜக ஆட்சிசெய்யக்கூடிய உத்திராக்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சூழலில் மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்யவும் கர்நாடகா காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. அரசியல் சட்ட முன்னுரையை பள்ளி, கல்லூரிகளில் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்றும் உத்தரவிட அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜூலை 3-ல் நடைபெற உள்ள பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது நிறைவேற்ற முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post முந்தைய பாஜக அரசு நிறைவேற்றிய மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: