குஜிலியம்பாறையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம்

குஜிலியம்பாறை, ஜூன் 15: குஜிலியம்பாறையில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் மாவட்ட உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராமம் தழுவிய விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. குஜிலியம்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கீதா தலைமை வகித்தார். பயிற்சியில் திண்டுக்கல் மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் ரேஷ்மா கலந்து கொண்டு, வேளாண் அடுக்கு, கோடை உழவு, இயற்கை விவசாயம் உயிரியல் இடுபொருட்கள் வாயிலாக லாபகரமான விவசாயம் செய்யும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

தோட்டக்கலைத்துறை சார்பில், திண்டுக்கல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கிருபா, பெம்மிஜோதி ஆகியோர் தோட்டக்கலைத்துறையின் மானியத்திட்டங்கள் மற்றும் காய்கறி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். விதை சான்று மற்றும் அங்கக சான்று துறை விதை சான்று அலுவலர் சின்னண்ணன், விதைப்பண்ணையின் முக்கியத்துவம் மற்றும் அங்கக சான்றளிப்புத்துறையின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.

மேலும் குஜிலியம்பாறை வட்டார வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் ஆகியோர், வேளாண்மைத்துறையின் திட்டங்கள் குறித்தும், நுண்ணீர் பாசனம் முறைகள் குறித்தும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கப்படும் விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுரங்கள் மற்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு உளுந்து விதை நேர்த்தி செய்தல் குறித்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ட மேலாளர்கள் நித்யா, காமாட்சி ஆகியோர் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சப்பாணிமுத்து நன்றி கூறினார்.

The post குஜிலியம்பாறையில் உழவர் பயிற்சி நிலையம் சார்பில் விவசாயிகள் பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: