தொடரும் கோடை வெயில் தாக்கத்தினால் சிவகிரி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

*பொதுமக்கள் கடும் அவதி

சிவகிரி : தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் வடக்கு சத்திரம், தருமபுரி, கொத்தாடப்பட்டி, சிவராமலிங்கபுரம், குமாரபுரம் உட்பட 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையும் அதனைச் சார்ந்த கூலி தொழிலும் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
பேரூராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகுதியாக இருப்பதால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் விநியோகிக்க இயலவில்லை.

பொதுமக்களில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார கோம்பை ஆற்று பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் ஐந்து கிணறுகள் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த கிணறுகளிலும் போதுமாக தண்ணீர் இல்லை. 5 கிணறுகளில் இரண்டு மிகவும் பழுதடைந்து உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மீதிமுள்ள இரண்டு கிணறுகள் மூலமாக தண்ணீர் குழாய்கள் மூலமாக கொண்டு வரப்பட்டு ஊரில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்பொழுது கடுமையாக வெயில் அடிப்பதால் குடிநீர் வழங்கிக் கொண்டிருந்த இரண்டு கிணறுகளிலும் தண்ணீர் மிகவும் குறைந்து விட்டது.

இதனால் தண்ணீர் கலங்கலாக வழங்கப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து புதிதாக பதவியேற்ற பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கட கோபு, துணைத்தலைவர் லட்சுமி ராமன், உறுப்பினர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தின ராஜ், செந்தில்வேல் மற்றும் பொதுமக்கள் குடிநீர் கிணறுகள் உள்ள கோம்பை பகுதியில் சென்று கிணறுகளை ஆய்வு செய்தனர்.

அனைவருக்கும் போதுமான அளவு குடிநீர் கிடைக்க வேண்டுமென்றால் பழுதாகி உள்ள 3 கிணறுகளையும் சீரமைக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தற்போது போதுமான நிதி இல்லை என்று கூறப்படுகிறது.அனைவருக்கும் சீராக குடிநீர் கிடைப்பதற்கு வேண்டிய நிதி உதவியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தற்போது லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூடுதலான லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடரும் கோடை வெயில் தாக்கத்தினால் சிவகிரி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு appeared first on Dinakaran.

Related Stories: