வைப்பாறு பாலம் சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்

 

சாத்தூர், ஜூன் 13: சாத்தூர் வைப்பாறு பாலத்தில் குவிந்திருக்கும் மண் குவியலால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. சாத்தூர் நகர் பகுதியில் மெயின் சாலை மின்வாரிய துணை மின் நிலையம் முதல் சடையம்பட்டி விலக்கு வரை கடந்த மாதம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான காலி இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தனியார் வணிக நிறுவனங்களின் வாசல் முன்பு குவித்து வைத்திருந்த மண் குவியல்களை அகற்றி அப்புறப்படுத்தினர். அங்கிருந்து அப்புறப்படுத்திய மண்களை சாத்தூர் வைப்பாறு பாலத்தின் வடக்கு நுழைவு பகுதியில் மலை போல் குவித்து வைத்துள்ளனர்.

மெயின் ரோட்டில் இருந்து வைப்பாறு மேம்பாலம் வழியாக கோவில்பட்டி, உப்பத்தூர், சடையம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு எப்போதும் போக்குவரத்து நிறைந்திருக்கும் பாலத்தில் நெடுஞ்சாலை துறையினர் கொட்டி வைத்திருக்கும் மண் குவியலால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். பெரியளவில் விபத்து ஏற்படும் முன்பு மண் குவியலை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வைப்பாறு பாலம் சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: