இதில் கலந்து கொண்டு தந்தை சிலையை திறந்து வைத்த பின்னர் சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:
எனது தந்தை தனது அரசியல் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டார். ஆனால் தனது கொள்கைகளை ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. இன்று அரசியலில் இருப்பவர்கள், மாறுபட்ட சிந்தனை, சித்தாந்தம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் கூட்டு நோக்கம் அரசியலை பொறுத்தவரை தெளிவாக இருக்க வேண்டும். இன்று, அச்சமின்றி பேசுவது, உண்மையை ஆதரிப்பது தான் இந்த நாட்டின் தேவை. பாதகமான சூழ்நிலைகளில் கூட நேர்மையை சமரசம் செய்யக்கூடாது. எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், நீங்கள் சொன்னதையும், நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் பொதுமக்கள் எப்போதும் எடைபோடுவார்கள் என்று நான் நம்புகிறேன். பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை பெறுவதே எனது முதல் முன்னுரிமை. நம்பகத்தன்மை தான் அரசியலில் மிகப்பெரிய சொத்து. நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து இருக்கிறீர்கள்.
இனிவரும் காலங்களிலும் உங்கள் நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. அதை குறைய விடமாட்டேன் என உறுதியளிக்கிறேன், எந்த சூழ்நிலையில் இருந்தாலும், மக்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் வாக்குறுதி. கடந்த 20-22 ஆண்டுகளில், நான் அரசியலில் இருந்து, நம்பிக்கை குறைவதற்கு வழிவகுத்த எந்த ஒரு செயலையும் நான் செய்யவில்லை. நான் அளித்த வாக்குறுதிகளில் முன்பும் பின்வாங்கவில்லை. இப்போதும் பின்வாங்கப் போவதில்லை. எந்த சூழ்நிலையில் இருந்தாலும், நீதியைப் பெற்று உங்களுக்காக போராடுவேன். நாளை நிச்சயம் நியாயம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் பர்சாதி லால் மீனா, மம்தா பூபேஷ், பிரதாப் சிங் கச்சாரியாவாஸ், ராஜேந்திர குதா, ஹேமராம் சவுத்ரி, பிரிஜேந்திர ஓலா, எம்எல்ஏக்கள் தீபேந்திர சிங் ஷெகாவத், ஜிஆர் கட்டனா, முராரி லால் மீனா, முகேஷ் பாகர், கிலாடி பைர்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post மக்களின் நம்பிக்கைதான் எனது சொத்து எந்த சூழ்நிலையிலும் பின்வாங்க மாட்டேன்: சச்சின் பைலட் அறிவிப்பு appeared first on Dinakaran.
