மணலியில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்து 100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 

திருவொற்றியூர், ஜூன் 11: மணலியில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்த ₹100 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 18வது வார்டுக்கு உட்பட்ட சி.பி.சி.எல் நகர் அருகே ஒரு தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அருகில் உள்ள நீர்நிலை பாதைகள், சுடுகாடு போன்ற அரசுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து இயங்குவதாக பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதன்பேரில், சென்னை மாநகராட்சி, மணலி மண்டல அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் இடம் தொடர்பாக வருவாய்த்துறை ரீதியான ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது மழைநீர் வடிகால் பாதைகள் மற்றும் நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து அந்த நிறுவனம் சுற்றுச்சுவர் அமைத்தது தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில், மணலி மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்று சி.பி.சி.எல் நகர் பகுதிக்குச் சென்று, தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து கட்டியிருந்த சுற்றுச்சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றி, சுமார் ₹100 கோடி மதிப்பிலான 3.3 ஏக்கர் நீர்நிலை அரசு நிலத்தை மீட்டனர்.
மீட்கப்பட்ட இடத்தில் சுமார் 30 அடி அகலம் கொண்ட மழைநீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘மழைக்காலங்களில் மணலி பகுதியில் உள்ள சின்ன மாத்தூர், எம்ஜிஆர் நகர், லபரிமேடு போன்ற குடியிருப்பு பகுதியில் இருந்து வரக்கூடிய மழை நீர், புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயைச் சென்றடையும். இந்த நீர்நிலைப் பாதைகளை கடந்த 30 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்தது. இதனால் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுபோன்று மேற்கண்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள மற்ற நிலங்களையும் மீட்டு, அந்த இடத்தில் பள்ளி, விளையாட்டு மைதானம் மற்றும் மயான பூமி போன்றவற்றை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

The post மணலியில் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் இருந்து 100 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: