தயாநிதி மாறன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ₹1.20 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

சென்னை, ஜூன் 11: தயாநிதி மாறன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில், சென்னை மெரினா அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் மூலம் நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். நீண்ட காலமாக பேருந்து நிலையம் திறந்தவெளி மைதானமாக இருந்தது. இதனால், வெயில், மழை காலங்களில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதை தவிர்க்க நிழற்குடையுடன் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து திறந்த மைதானமாக இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன.

இந்நிலையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.20 கோடியில் மெரினா அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறையையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 15 ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு இலவச சீருடைகளையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்பி தயாநிதி மாறன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆயிரம்விளக்கு எம்எல்ஏ டாக்டர் எழிலன், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு, மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்களுக்கு பயன்படுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் அண்ணா சதுக்கத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கத்தில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கும் கழிப்பிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்காதது தொடர்பாக தீவிர விசாரணை செய்த பின்னர்தான் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்ற குழப்பத்தால் இது நடந்து விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும். கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறாமல் இருந்துள்ளது. காணொலி மூலமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று உள்ளனர். அதன் பின்னர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுள்ளனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தயாநிதி மாறன் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ₹1.20 கோடியில் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: