பவானியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

 

பவானி,ஜூன்11: இந்திய பல் மருத்துவ சங்கம்,பவானி – குமாரபாளையம் ரோட்டரி சங்கம் மற்றும் குமாரபாளையம் ஜேகேகே நடராஜா பல் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி பவானியில் நேற்று நடைபெற்றது. பவானி புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கிய பேரணி மேட்டூர் ரோடு, அந்தியூர் பிரிவு, விஎன்சி கார்னர் பூக்கடை பிரிவு வழியாக கூடுதுறையில் இந்த பேரணி முடிவடைந்தது. இப்பேரணிக்கு, ஜேகேகே நடராஜா பல் மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் சரவணா தலைமை தாங்கினார். பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் மோகன் குமார், திமுக நகரச் செயலாளர் ப.சீ.நாகராஜன், துணைச் செயலாளர் முருகேசன்,ரோட்டரி சங்கத் தலைவர் பிரபாத் மகேந்திரன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் ஜீவா சித்தையன், பல் மருத்துவர் சங்கத் தலைவர் சசிகுமார், செயலாளர் வி.செந்தில்குமார், பொருளாளர் விமலாதித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில், சிகரெட் தயாரிக்க 600 மில்லியன் மரங்கள் அழிக்கப்படுகிறது. சிகரெட் புகைப்பதால் 8.40 கோடி டன் கரியமில வாயு காற்றில் கலக்கிறது. புகையிலை பயன்பாட்டால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது.

புகையிலையில் நோயை உண்டாக்கும் கார்பன் மோனாக்சைடு நச்சு உள்ளது. இதனால், தொடர்ந்து புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப் பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத் தன்மை என பிற பாதிப்புகள் ஏற்படுகிறது. புகையிலையை எந்த வடிவிலும் பயன்படுத்தினாலும் இதய நோயை உண்டாக்கும். எனவே, புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பேரணியில் வலியுறுத்தப்பட்டது. பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

The post பவானியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: