திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம் தமிழ் நடிகையை அடித்துகொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு

திருமலை: ஐதராபாத்தில் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் சென்னையை சேர்ந்த தமிழ் நடிகையை அடித்துக்கொன்று பாதாள சாக்கடையில் சடலத்தை வீசிய கோயில் பூசாரியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தை சேர்ந்தவர் வெங்கட சாய் சூர்ய கிருஷ்ணா(28). கோயிலில் பூசாரியாக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சென்னையை சேர்ந்தவர் அப்சரா(30). கடந்த 10 ஆண்டுக்கு முன் தமிழ் திரைப்படம் ஒன்றில் சிறு வேடத்தில் நடித்த அப்சரா, வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஷம்ஷாபாத்தில் தனது தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அப்சரா கோயிலுக்கு சென்று வரும்போது பூசாரி கிருஷ்ணாவுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் தகாத உறவாக மாறியது. தொடர்ந்து இருவரும் தனிமையில் இருந்து வந்தனர். அதனால் அப்சரா கர்ப்பமானதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கருவை கலைக்க கிருஷ்ணா, அப்சராவை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர், இருவரும் மீண்டும் தனிமையில் இருந்துள்ளனர். அதனால், அப்சரா மீண்டும் கர்ப்பமாகியதால் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பூசாரிக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால் அப்சராவை கொலை செய்ய முடிவு செய்த அவர், அதற்காக அப்சராவை கடந்த 3ம் தேதி கோயம்புத்தூர் அழைத்துச் செல்வதாக கூறி வரவழைத்து சரூர் நகருக்கு வரும்படி கூறினார். அதன்படி அப்சரா சரூர் நகருக்கு வந்த நிலையில், அங்கிருந்து அப்சராவை, ஷம்ஷாபாத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஒரு காரில் பூசாரி அழைத்து சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணா அப்சராவின் தலையில் கல்லால் சரமாரி தாக்கி கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அப்சாராவின் சடலத்தை காரில் வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் நகரில் சுற்றிக்கொண்டிருந்துள்ளார்.

பின்னர் சரூர் நகருக்கு கொண்டு வந்து அங்குள்ள தாசில்தார் அலுவலகம் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் வீசி சென்றார். பின்னர், எதுவும் தெரியாதது போல் தனது தோழிகளுடன் பத்ராச்சலம் செல்வதாக அப்சரா கூறியதாகவும், அதன் பிறகு காணாமல் போனதாக அவரது தாயிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கிருஷ்ணாவும், அப்சராவும் காரில் சரூர் நகரில் இருந்து ஷம்ஷாபாத் நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கிருஷ்ணாவை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், திருமணத்துக்கு வற்புறுத்தியதால் அப்சராவை கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிச்சென்றதை அவர் ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் போலீசார் அப்சராவின் உடலை பாதாள சாக்கடையில் இருந்து கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூசாரி சூர்ய கிருஷ்ணாவை கைது செய்தனர்.

The post திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம் தமிழ் நடிகையை அடித்துகொன்ற பூசாரி: பாதாள சாக்கடையில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Related Stories: