இந்த மாதம் முழுவதும் சோதனை ஓட்டம் ஜூலை முதல் செயல்பாட்டுக்கு வரும் சென்னை புதிய விமான நிலையம்

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச புதிய முனையத்தில், சோதனை ஓட்டங்கள் நிறைவடையாததால், புதிய விமான முனையம் முழு அளவில் செயல்படுவது வரும் ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் சோதனை ஓட்டம் தொடர்ந்து நடக்கிறது. சென்னை மீனம்பாக்கத்தில், சர்வதேச ஒருங்கிணைந்த புதிய விமான முனையம், முதல் பேஸ் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் 8ம் தேதி திறந்து வைத்தார். ஏற்கனவே உள்ள சென்னை விமான நிலையத்தில், ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். இந்த புதிய முனையம் மூலம் 30 மில்லியன் பயணிகள், பயணிப்பதற்கான வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தில், முதல் சோதனை ஓட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தொடங்கியது. அதை தொடர்ந்து விமான நிலையத்தில், மேலும் சில அபிவிருத்திப் பணிகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் மே 3ம் தேதியில் இருந்து, சோதனை முறையில் சில விமானங்கள் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்பட்டன. ஆனால், சிறிய ரக விமானங்களான ஏர் பஸ் 320, 321 மற்றும் போயிங் ரக 737, 738 விமானங்கள் மட்டுமே, சோதனை அடிப்படையில் புதிய ஒருங்கிணைந்த முனையம் வந்து சென்றன. தொடர்ந்து, நடுத்தர விமானங்களும் குவைத், இலங்கை, எத்தியோப்பியா நாடுகளுக்கு சோதனை முறையில் இயக்கப்பட்டன. பகல் நேரங்களில் மட்டுமே நடந்து வந்த விமானங்கள் சோதனை ஓட்டம், இரவு நேரங்களிலும் புதிய முனையத்தில் நடந்தன.

ஆனால் அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்தபடி, சோதனை விமான ஓட்டங்கள், கடந்த மே மாதம் இறுதிக்குள் நிறைவடையவில்லை. சோதனை ஓட்டத்தின் போது ஒரு சில பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மொபைல் போன் சிக்னல்களில் தடை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. அதோடு வேறு சிறு பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே தற்போது அந்த பிரச்னைகளை தீர்க்கும் விதத்தில், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்நிலையில் நாளை (12ம்தேதி) முதல், 180 இருக்கையில் இருந்து 194 இருக்கைகள் வரை உள்ள நடுத்தர விமானங்கள் புதிய முனையத்தில் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு முதற்கட்டமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளிநாடுகளுக்கு குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட், தோஹா, டாக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரும் சர்வதேச விமானங்கள் புதிய முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோன்று ஜூன் மாதம் முழுவதும் இதே நிலைப்பாடு நீடிக்க இருக்கிறது. அதன் பின்பு வருகிற ஜூலை மாதத்தில் இருந்து சென்னை ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், முழு அளவில் செயல்பட இருக்கிறது.

அப்போது இந்த முனையங்களில் சிறிய, நடுத்தரக மற்றும் பெரிய ரக விமானங்கள் அனைத்தும் ஜூலை மாதத்தில் இருந்து இயங்க தொடங்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இதனால் சென்னை ஒருங்கிணைந்த புதிய விமானம் முனையம் முழு அளவில் செயல்படுவது, ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதத்திற்கு தள்ளிப் போய் உள்ளது. சோதனை ஓட்டம் முழுமையாக முடிவடையாததால், இந்த ஒரு மாத காலம் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

The post இந்த மாதம் முழுவதும் சோதனை ஓட்டம் ஜூலை முதல் செயல்பாட்டுக்கு வரும் சென்னை புதிய விமான நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: