தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு நிறைவு: இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு வகையான பாடப் பிரிவுகளில் இருக்கும் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் சேருவதற்கு கடந்த மாதம் 8ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 மாணவ, மாணவிகள் விண்ணப்ப பதிவு செய்திருந்தனர். விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள், தேசிய மாணவர் படையை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு கடந்த மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதில் 3 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகளுக்கு இடங்கள் கிடைத்தன. பொது கலந்தாய்வு 2 கட்டங்களாக நடத்தப்படும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல்கட்ட கலந்தாய்வு கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 40,287ஐ தொட்டுள்ளது. இவர்களில் 15,034 பேர் ஆண்கள், 25,253 பேர் பெண்கள், மற்றும் இவர்களில் 10,918 மாணவிகள் புதுமை பெண் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை (திங்கள் கிழமை) முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து 22ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு நிறைவு: இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: