அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பலகோடி மோசடி ஏ.ஆர்.டி. குழுமத்தின் உரிமையாளர் 2 பேர் கைது

சென்னை: சென்னை முகப்பேரை தலைமையிடமாக கொண்டு ஏ.ஆர்.டி குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தில் தங்க நகை அடகுகடை, சூப்பர் மார்க்கெட், எலக்ட்ரானிக் கடை, சலூன் மற்றும் ரெஸ்டாரன்ட் செயல்பட்டு வந்தது. இந்த குழுமத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், வாரம் 3 ஆயிரம் மற்றும் மாதம் 12,000 ஆயிரம் வட்டியுடன் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து, முகப்பேர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பணம் கட்டினர். ஆனால் முறையாக அவர்களுக்கு மாதந்தோறும் வட்டியுடன் பணம் வழங்கப்படவில்லை.

இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், அக்குழுமத்தின் மீது புகார் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். இதை அறிந்த, ஏ.ஆர்.டி. குழுமம் உரிமையாளர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் மற்றும் ஊழியர்கள் பிரியா, விமா, சமீர், ஜவகர் ஆகிய 6 பேரும் தலைமறைவாகிவிட்டனர். கடந்த மார்ச் 30ம் தேதி புழல் பகுதியில் உள்ள பிரியா வீட்டை கண்டுபிடித்த பாதிக்கப்பட்ட மக்கள், அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த நொளம்பூர் போலீசார் விரைந்து சென்று பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக இருந்த இக்குழுமத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், 2 பேரையும் அழைத்துசென்று, ஏ.ஆர்.டி. தங்க நகை கடை, மால் ஆகிய பகுதிகளில் சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இங்கு சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர். இந்நிலையில், ஏ.ஆர்.டி குழுமத்தில் 3வது நாளாக நேற்று சோதனை நடத்தினர். இதில், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

The post அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டி பலகோடி மோசடி ஏ.ஆர்.டி. குழுமத்தின் உரிமையாளர் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: