வேளச்சேரி நீச்சல் குளம் வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம், கூடுதல் வசதிகள்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

சென்னை: சென்னை, வேளச்சேரி நீச்சல் குள வளாகம் 4,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய இருக்கை வசதிகள், 50மீ X 25மீ அளவு கொண்ட 8 வரிசைகள் உள்ள ஒரு சர்வதேச தரத்திலான பந்தய நீச்சல் குளம், 18மீ X 25மீ X 5மீ அளவிலான ஒரு குதித்தல் குளம் மற்றும் 25மீ X 25மீ அளவிலான ஒரு பயிற்சி நீச்சல் குளம், குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய உடற்பயிற்சி மையம், இறகுப்பந்து உள்ளரங்கம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளரங்கம் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.

சென்னை வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நவீன ஜிம்னாஸ்டிக் உபகரணங்கள் வழங்கப்பட்டு, புதியதாக பயிற்றுநர் அறை, மாணவ மாணவிகளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் ஆண், பெண் இருபாலருக்கான கழிவறைகள் கட்டப்பட்டு மற்றும் எல்.இ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வேளச்சேரி நீச்சல் குளம் வளாகத்தில் தரம் உயர்த்தப்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம் மற்றும் கூடுதல் மேம்பாட்டு வசதிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் மாணவ, மாணவிகளின் சாகச நிகழ்ச்சிகளை அமைச்சர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கண்டுகளித்தனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ எஸ்.அரவிந்த் ரமேஷ், சென்னை மாநகராட்சி துணைமேயர் மகேஷ்குமார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, மண்டல குழு தலைவர்கள் துரைராஜ், ரவிச்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

The post வேளச்சேரி நீச்சல் குளம் வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அரங்கம், கூடுதல் வசதிகள்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: