யூடியூப் பார்த்து தீர்த்துக்கட்ட திட்டம் மைதாவை வாயில் திணித்து கணவனை கொல்ல முயற்சி: இளம்பெண் கைது ; காதலனுக்கு வலை

நாமகிரிப்பேட்டை: யூடியூப் பார்த்து தலையணையில் மைதா மாவை தூவி கணவன் முகத்தை அழுத்தி கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சின்னகாக்காவேரியைச் சேர்ந்தவர் குணசேகரன்(30). இவரது மனைவி இளவரசி(27). 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுக்கு முன்பு, எலச்சிபாளையம் அருகே நல்லம்பாளையம் சக்திவேல் தோட்டத்திற்கு, தம்பதி இருவரும் கூலி வேலைக்கு சென்றனர். அப்போது, தோட்ட உரிமையாளர் சக்திவேலுவுடன், இளவரசிக்கு பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது.

இதுகுறித்து குணசேகரனுக்கு தெரியவே, கடந்த ஒரு மாதத்திற்கு முன், மனைவியை அழைத்துக் கொண்டு, சொந்த ஊரான சின்னகாக்காவேரிக்கு சென்று விட்டார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், இரவு11.30 மணியளவில், இளவரசியை சந்திக்க நண்பர்கள் 2 பேருடன் சக்திவேல் சென்றார். அப்போது, இளவரசிக்கு போன் செய்து கதவை திறக்குமாறு கூறியுள்ளார். அவர் கதவை திறந்ததும், உள்ளே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குணசேகரன் முகத்தில் தலையணையை வைத்து சக்திவேல், இளவரசி மற்றும் கூட்டாளிகள் என 4 பேரும் அழுத்தி உள்ளனர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட குணசேகரன் அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வரவே தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, இளவரசியை கைது செய்தனர். விசாரணையில், குணசேகரனை கொலை செய்ய திட்டம் தீட்டிய இளவரசி, போலீசாரிடம் சிக்காமல் கொலை செய்வது எப்படி? என்பது தொடர்பான வீடியோக்களை யூடியூப்பில் பார்த்துள்ளார். அதன்படி, அருகில் உள்ள மளிகை கடையில் மைதா மாவு வாங்கி வந்து அதனை உருண்டையாக உருட்டி, தலையணையை வைத்து அழுத்தும் போது, கணவன் வாயை திறந்து கத்த முயன்றால், அவரது வாயில் அதை திணித்து அடைக்க தயாராக வைத்திருந்தார். மேலும், மைதா மாவு தூவினால், கைரேகையை தடயவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் இளவரசி தெரிவித்துள்ளார். இதையடுத்து இளவரசியை கைது செய்த போலீசார் சக்திவேல், அவரது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post யூடியூப் பார்த்து தீர்த்துக்கட்ட திட்டம் மைதாவை வாயில் திணித்து கணவனை கொல்ல முயற்சி: இளம்பெண் கைது ; காதலனுக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: