தமிழக வனத்துறையில் முதன்முறை தொட்டபெட்டா செல்ல பாஸ்ட் டேக் அறிமுகம்

ஊட்டி: தமிழகத்தில் முதன்முறையாக தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் சாலையில் பாஸ்ட் டேக் முறை வனத்துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி அருகே தொட்டபெட்டா காட்சிமுனைக்கு செல்கின்றனர். அங்கு இயற்கை அழகையும், டெலஸ் கோப் மூலம் தொலை தூர இயற்கை அழகையும் கண்டு ரசிக்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூழல் மேம்பாட்டுக்குழு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.20, ஆட்டோவிற்கு ரூ.30, கார்களுக்கு ரூ.40 மற்றும் வேன்களுக்கு ரூ.70ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதுவரை சூழல் சுற்றுலா மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் நுழைவு சீட்டுக்களை வழங்கி கட்டணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில், தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களிடம் பாஸ்ட் டேக் (மின்னணு பரிவர்த்தனை முறையில்) கட்டணம் வசூலிக்கும் முறை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டது.

இத்திட்டத்தினை தமிழக அரசு வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ துவக்கி வைத்தார். இனி, தொட்டபெட்டா செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த பாஸ்ட் டேக் மூலம் நுழைவு கட்டணத்தை செலுத்தி தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லலாம். இவ்வசதி இல்லாத சுற்றுலா பயணிகள் வழக்கம் போல், நுழைவு கட்டணங்களை நேரடியாக செலுத்தியும் செல்லலாம். தமிழகத்தில் முதன் முறையாக நீலகிரி மாவட்டத்தில் வனத்துறை மூலம் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தமிழக வனத்துறையில் முதன்முறை தொட்டபெட்டா செல்ல பாஸ்ட் டேக் அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: