மன்னார்குடி: லஞ்சம் கேட்ட விவகாரத்தில் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மரக்கடை பகுதியை சேர்ந்த விஜயராகவன், பொக்லைன் இயந்திரத்தை நகராட்சி பணிகளுக்கு வாடகைக்கு விட்ட வகையில், ரூ.1 லட்சத்து, 9 ஆயிரம் வாடகை பாக்கியை வழங்குவதற்கு ஆணையர் குமரிமன்னன் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை நடுவத்தில் புகார் அளித்தார். வட்டியுடன் பணத்தை வழங்க உத்தரவிட்டும், அவர் இழுத்தடிக்கவே, கடந்த 8ம்தேதி கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகத்துக்கு குடும்பத்துடன் வந்த விஜயராகவன், தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, ஆணையர் குமரிமன்னனை சஸ்பெண்ட் செய்து நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா நேற்று உத்தரவிட்டார். சஸ்பெண்ட் காலத்தில் ஆணையர் குமரி மன்னன் பெரம்பலூரிலேயே தங்கியிருக்க வேண்டும். உயர் அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் பெரம்பலூரை விட்டு எங்கேயும் வெளியே செல்லக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வாலாஜாபாத் நகராட்சி ஆணையராக இருந்தபோது, அங்கும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் குமரி மன்னன் கூத்தாநல்லூருக்கு மாற்றப்பட்டார். இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post லஞ்சம் கேட்டதால் குடும்பமே தீக்குளிக்க முயற்சி கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.