கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: விரைந்து பணிகளை முடிக்க சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்

சென்னை: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தினார். சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும், 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் மற்றும் பேரூரில் அமையவுள்ள 400 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பூர்வாங்கப் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். நெம்மேலியில் ரூ.1516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாள்ளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது. கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சாரம் கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், கடல்நீரை நிலையத்திற்கு உள் கொணரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்கு வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மேலும், கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, 2250 மிமீ விட்டமுள்ள 1,035 மீட்டர் நீளமுள்ள கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்திற்கு குழாய் கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் மீதமுள்ள 200 மீட்டர் நீளத்திற்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

48.10 கி.மீ நீளத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை ஆய்வு செய்த கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும், இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர் மூலம் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

முன்னதாக, பேரூரில் அமையவுள்ள 400 மில்லியன் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பூர்வாங்கப் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், உடனடியாக பணிகளை தொடங்கிட அறிவுறுத்தினார். ஆய்வின் போது, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், தலைமைப் பொறியாளர் மலைச்சாமி, வாரிய கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.மோகன், செயற்பொறியாளர் கிருபாகரவேல் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் ஆய்வு: விரைந்து பணிகளை முடிக்க சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: