பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 12ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு வரும் 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு (பிவிஎஸ்சி – ஏஹெச்) படிப்புக்கு 660 இடங்கள் உள்ளன. சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. தவிர, தமிழகத்துக்கு 597 இடங்கள் இருக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக் படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) தவிர, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மை கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்ட படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஹெச், பி.டெக். படிப்புகளுக்கு 2023-24ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12-ம் தேதி காலை 10 மணி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளிநாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பில் 45 இடங்கள், உணவு தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

The post பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் 12ம் தேதி முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்: ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: