உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவதில் 100% முன்னுரிமை

கிருஷ்ணகிரி, ஜூன் 10: உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, இடுபொருட்கள் பெறுவதில் 100 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், உழவர்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ள “உழவன்” செயலியில், தற்போது 21 வகையான சேவைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில மற்றும் ஒன்றிய அரசால் வழங்கப்படும் மானியத்திட்டங்கள், விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை, எந்த ஒரு தடையும் இன்றி பெற முன்பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, இடுபொருள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், விவசாயிகள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் உள்ள உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்களை, தங்களது செல்போனிலேயே எளிதில் அறிந்து கொள்ளலாம்.

மேலும், தங்களுக்கு தேவையான விதைகள், அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் மற்றும் தனியார் துறையில் இருப்பு உள்ளதா, இல்லையா, கிலோ என்ன விலை என, இருந்த இடத்தில் இருந்தவாறே அறிந்து கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் செல்போன் எண்ணுடன் கூடிய விதை இருப்பு நிலை, அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் நிறுவனங்களின் இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு எளிதில் பெறுவது போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், இயற்கை விவசாயிகளின் தரவுகள் மாவட்ட வாரியாக, விற்பனையாளர்கள் விவரத்துடன் கூடிய இயற்கை பண்ணைய பொருட்கள் பகுதி, உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் விவரம் மற்றும் அதன் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்கள் விவரம் எளிதில் பெற குழு பொருட்கள், தற்போதுள்ள சூழலுக்கேற்ப பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்களை அளிக்கும் வேளாண் செய்திகள் குறித்த தகவல்களை பெற முடியும்.

விவசாயிகளுக்கான அட்மா பயிற்சி மற்றும் செயல்விளக்கம், உழவன் இ-சந்தை, பட்டு வளர்ப்பு மற்றும் மானியங்கள், விலை விவரங்கள் அறிய பட்டு வளர்ச்சித்துறை, வேளாண் நிதி நிலை அறிக்கை, தரிசு நிலங்களை பரிசு நிலங்களாக மாற்ற விண்ணப்பம் செய்ய உதவ, வேளாண் வளர்ச்சித்திட்டம் என அரசால் வழங்கப்படும் அனைத்து பயன்களையும் ஒரே குடையின் கீழ் பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எளிய செயலியாக இது உள்ளது. தமிழக அரசின் முக்கிய நோக்கமான, அனைத்து திட்டங்களின் பயன்களும் அனைத்து விவசாயிகளையும் எளிதில், விரைவில் சென்றடைந்து, விவசாயிகள் உற்பத்தியை உயர்த்தி, வாழ்வாதாரம் பெருகச்செய்ய உழவன் செயலியை பயன்படுத்த வேண்டும். இதனை கூகுளில் பிளே ஸ்டோர் என்ற பகுதிக்கு சென்று “உழவன்” என தட்டச்சு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு நமது செல்போன் எண், குடியிருப்பு விவரங்களை பதிவு செய்து இச்செயலியை தொடர்ந்து பயன்படுத்தலாம். தற்போது, விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை பெறும் திட்டத்தில், உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, 100 சதவீத முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே, இந்த வாய்ப்பினை அனைவரும் தவறாது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குவதில் 100% முன்னுரிமை appeared first on Dinakaran.

Related Stories: