மத்தூர் ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு அங்கன்வாடி மையங்களை சுத்தமாக பராமரிக்க உத்தரவு

போச்சம்பள்ளி, ஜூன் 10: மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையம், மருத்துவமனைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, மத்தூர் ஒன்றியம் மூக்காகவுண்டனூர் அங்கன்வாடி மையத்தை நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகளின் வருகை பதிவேடு, ஊட்டச்சத்து உணவு வழங்கும் விவரங்கள், அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பொருட்கள் குறித்த பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கு ஆடல்- பாடல் மூலம் கற்பிக்கப்படும் கற்றல் செயல்பாடுகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்கன்வாடி மையத்தில் சமையலறை, கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நன்கு காய்ச்சிய குடிநீரும், சத்தான உணவுகளும் வழங்க வேண்டும் என அங்கன்வாடி பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மூக்காகவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தூய்மைப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், களர்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, போச்சம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், பங்கேற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 93 மனுக்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர்(நில அளவை) சேகரன், தாசில்தார் தேன்மொழி, கலெக்டர் அலுவலக மேலாளர் ராமச்சந்திரன், தனி தாசில்தார்கள் கங்கை, சுரேந்தர், நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தாசில்தார்கள் சகாதேவன், பிரபாவதி, ஆர்ஐ.,கள் ஜெயபிரபா, லதா, பிடிஓ பாலாஜி, போச்சம்பள்ளி மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். நாராயணசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post மத்தூர் ஒன்றியத்தில் கலெக்டர் ஆய்வு அங்கன்வாடி மையங்களை சுத்தமாக பராமரிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: