கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு

திருமலை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அம்பதிராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் விரைவில் இணைவது உறுதியாகியுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பொன்னூரை சேர்ந்தவர் பிரபல கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு. இவர் 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது கடைசி போட்டியில் விளையாடினார். இந்நிலையில், அவர் மே 30ம் தேதி வெளியிட்ட ட்வீட்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று அரசியலில் இணைய உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் எந்த கட்சியில் இணைவார் என தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

கடந்த மாதம் 11ம் தேதி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை அம்பதிராயுடு திடீரென சந்தித்தார். அதன்பின்னர் நேற்று முன்தினம் தாடேபள்ளியில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஜெகன் மோகனை சந்தித்து சுமார் அரைமணி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது அம்பதிராயுடு கடைசியாக விளையாடிய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கோப்பையுடன் வந்து சந்தித்தார்.

அப்போது ஒய்எஸ்ஆர் கட்சியில் அவர் இணைவது உறுதிசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ‘விரைவில் முறைப்படி அம்பதிராயுடு ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைவார். அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது அவர் குண்டூர் எம்.பி. தொகுதியிலோ அல்லது பொன்னூர் சட்டமன்ற தொகுதியிலோ நிறுத்தப்படலாம்’என்றனர்.

The post கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: