சென்னை, ஜூன் 10: சென்னை மாநகர மக்களுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி சென்னையை சுற்றியுள்ள 5 ஏரிகளிலும் 6.82 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் தவணையாக ஜூலை மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. உள்பட 12 டி.எம்.சி. நீரை ஆண்டுதோறும் ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நடப்பாண்டுக்கான கிருஷ்ணா நதி நீர் கடந்த மாதம் 1ம் தேதி திறந்துவிடப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு வரத்து கால்வாய் மூலம் வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 3ம் தேதி வரை ஆந்திர மாநிலத்தில் இருந்து 500 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் பெறப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 2 டி.எம்.சி.யை பெற வேண் டும் என்று நீர்வளத்துறை எதிர்பார்க்கிறது. ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்குள் அடுத்த தவணை வரவிருப்பதால், வினியோகத்தை அக்டோபர் மாதம் வரை தொடருமாறு தமிழக நீர்வளத்துறை சார்பில், ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.
அவ்வாறு வடகிழக்கு பருவமழை வரை வினியோகம் தொடர்ந்தால், சென்னைக்கு மொத்தமாக 5 டி.எம்.சி. நீர் கிடைக்கலாம். இது இந்த ஆண்டு தினசரி குடிநீர் வினியோகத்தை பராமரிக்கவும், தண்ணீர் பற்றாக்குறையை தவிர்க்கவும் உதவும். பூண்டி ஏரிக்கு சராசரியாக 300 கன அடி வீதம் நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீர் தேவைக்காக இணைப்பு கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 250 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 27.71 அடி நீர் அதாவது 1,271 டி.எம்.சி. இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் 1,038.80 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வினியோகம் செய்வதில் சுமார் 988.83 மில்லியன் லிட்டர் மாநகரம் மற்றும் கூடுதல் பகுதிகளில் உள்ள வீட்டு நுகர்வோர்களுக்கு வழங்கப்படுகிறது என்று சென்னை குடிநீர் வாரியம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அக்டோபர் வரை கிருஷ்ணா நீரை திறந்துவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு நீர்வளத்துறை வலியுறுத்தல் appeared first on Dinakaran.