கடந்த அதிமுக ஆட்சியில் விதிமீறி பணியாளர்களை நியமித்ததில் மாநகராட்சிக்கு ₹5.90 லட்சம் இழப்பு: தணிக்கை குழு தலைவர் தகவல்

திருவொற்றியூர், ஜூன் 10: கடந்த அதிமுக ஆட்சியின்போது, மணலி மண்டலத்தில் பூங்கா பராமரிப்பு பணிக்கு விதிமுறைகளுக்கு மாறாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டதால் மாநகராட்சிக்கு, ₹5.90 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைக்குழு தலைவர் தனசேகர் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மணலி மண்டல கணக்கு மற்றும் தணிக்கை நிலை குழு ஆய்வுக்கூட்டம், மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிலைக் குழு தலைவர் க.தனசேகரன் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் வரவேற்றார். கூட்டத்தில் மண்டல அலுவலர் கோவிந்தராஜ், கணக்கு – நிலைக்குழு உறுப்பினர்கள் தீர்த்தி, நந்தினி சண்முகம், சாரதா, பாரதி
தனலட்சுமி, வி.ராஜகுமாரி உள்பட உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு, நிலுவையில் உள்ள தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் போன்றவற்றின் வரி பாக்கி, வாடகை வசூல், மறுக்கப்பட்ட காசோலைகள் போன்றவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஒன்றிய அரசின் சிபிசிஎல் பாலிடெக்னிக் கல்லூரி காலிமனையின் நிலுவையில் உள்ள ₹1.3 கோடி சொத்து வரியை வசூலிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் கோரப்பட்டது. கூட்டத்தின் முடிவில், தணிக்கைக்குழு தலைவர் தனசேகர் கூறுகையில், ‘‘தணிக்கை குழு ஆய்வு நடத்தி அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக தற்போது வரி நிலுவை தொகை சுமார் ₹1,500 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ள அப்பார்ட்மென்ட் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓஎஸ்ஆர் நிலங்களை பையன் கையகப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2020-21ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, மணலி மண்டலம் 15 மற்றும் 18வது வார்டுகளில், பூங்கா பராமரிப்பு ஒப்பந்த பணிக்கு அனுமதிக்கப்பட்ட விதிகளுக்கு மாறாக கூடுதலாக காவலர், துப்புரவு பணியாளர்களை பணியமர்த்தபட்டதில் மாநகராட்சிக்கு, ₹5 லட்சத்து 91 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளதை தணிக்கை குழு கண்டுபிடித்து. இதன்மீது விசாரணை நடத்தவும், சம்மந்தப்படவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதுதொடர்பாக அனைத்து ஆவணங்களை தணிக்கைக்கு குழுவிற்கு சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார்.

The post கடந்த அதிமுக ஆட்சியில் விதிமீறி பணியாளர்களை நியமித்ததில் மாநகராட்சிக்கு ₹5.90 லட்சம் இழப்பு: தணிக்கை குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: