திருச்சி விமான நிலையத்தில் நெகிழ்ச்சி முதல்வர் அங்கிள்… படிக்க உதவி பண்ணுங்க! சிறுமியின் குரலுக்கு உடனடி ரெஸ்பான்ஸ், கல்வி செலவை ஏற்ற கலெக்டர்

திருச்சி: திருச்சியில் முதல்வர் வருகையின் போது, ‘முதல்வர் அங்கிள்… படிக்க உதவி பண்ணுங்க…’ என கேட்ட சிறுமியின் குடும்பத்திற்கு உதவிகளை செய்து தருவதாக திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை பார்வையிட நேற்றுமுன்தினம் இரவு திருச்சி வந்தார். அப்போது தாயுடன் மற்றும் சகோதரருடன் வந்திருந்த ஒரு சிறுமி முதல்வரை பார்த்து ‘‘முதல்வர் அங்கிள்… நான் படிப்பதற்கு உதவி பண்ணுங்க…’ என்று சத்தம் போட்டார். இதைக்கண்ட முதல்வர், இதுகுறித்து விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் அந்த சிறுமியிடம் விசாரித்தார்.

அந்த சிறுமி கோவையை சேர்ந்த காவ்யா (8) என்பது தெரியவந்தது. ‘அவர் குடும்ப வறுமையின் காரணமாக பள்ளியில் கட்டணம் செலுத்த முடியாததால் தன்னால் படிக்க முடியாத சூழல் உள்ளது. அண்ணன் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அதனால் படிக்க வைக்க நடவடிக்கை எடுங்கள்’ என கண்ணீர் மல்க கூறினார். இதனை கேட்ட கலெக்டர், அவருடைய விலாசம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற்று நிச்சயம் உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் கவிதா கூறுகையில்,‘‘எனது சொந்த ஊர் கோவை. மகள் காவியா 3ம் வகுப்பு படிக்கிறார். என் கணவர் முத்துக்குமார். பிளக்ஸ் பிரிண்டிங் இன்ஜினியர். அவருக்கு சொந்த ஊர் மணப்பாறை அருகேயுள்ள கண்ணுத்து கிராமம்.

கடந்த ஓராண்டுக்கு முன் எனது கணவர் தனது தாயை பார்க்க மணப்பாறைக்கு வந்த போது அவர் இறந்து விட்டதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். நான் கோவையில் இருந்து புறப்பட்டு கண்ணுத்துக்கு வந்தேன். அங்கு எனது கணவர் உடலை தொடக்கூட உறவினர்கள் என்னை அனுமதிக்கவில்லை. கணவரின் சொத்துகளை எங்களுக்கு கொடுத்து உதவ கேட்டபோது, எனது மாமியார் தர மறுத்து விட்டார். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், என்னுடைய குழந்தைகளை படிக்க வைக்க உதவிட வேண்டும் என்று முதல்வரின் தனிப்பிரிவிற்கும் நான் மனு அனுப்பி இருந்தேன். தங்குவதற்கு வீடு இல்லாததால், கடந்த 1 வாரமாக என்னுடைய குழந்தையுடன் சாலை ஓரத்தில்தான் தங்கி வருகிறேன்.

எனவே புத்தாநத்தம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் வருவதை அறிந்துதான் நான் இங்கு வந்தேன். எனக்கு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வாழ்வாதாரம் வேண்டி பிரிண்டிங் பிரஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன். எனவே முதல்வர் உதவி செய்வார் என்ற நம்பிக்கையில் இங்கு வந்தேன்’ என்று கூறினார். இந்நிலையில், நேற்று மாலை கவிதா மற்றும் அவரது மகள் காவ்யா, மகன் கவின்குமார் ஆகியோரை திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் நேரில் வரவழைத்து பேசினார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘‘தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு முதல்வர் உதவி செய்திட வேண்டும் என்று கொடுத்த விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டேன். முதற்கட்டமாக, கோவையில் அவர்கள் வாழ்வதற்கு வீடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் ஏற்பாடு செய்து தரப்படும். முக்கியமாக, குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். கவிதாவின் கல்வித் தகுதிக்கு தகுந்த ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்’ என்றார்.

* தஞ்சை நிலம் தொடும் போதெல்லாம்…. முதல்வர் டிவிட்
தஞ்சையிலிருந்து திருச்சிக்கு புறப்படும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நெற்கழனிகள் நிறைந்த என் தஞ்சை நிலம் தொடும் போதெல்லாம் மகிழ்ச்சியால் நெஞ்சம் நிறையும்’ என்று பதிவிட்டு இருந்தார். இந்த டிவிட் வைரலானது.

* முதல்வருக்கு ஆட்டுக்குட்டி பரிசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம் லால்குடி நந்தியாற்று பகுதிக்கு சென்றபோது, வெங்கடச்சலாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரது மகன் கீர்த்திவாசன், மகள் ஸ்ரீநிதி ஆகியோர் சாலையோரத்தில் ஆட்டுக்குட்டியுடன் முதல்வரை பார்ப்பதற்கு நின்றிருந்தனர். அப்போது அவர்களை கண்ட முதல்வர் வேனை நிறுத்தினார். இதையடுத்து இருவரும் முதல்வருக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினர்.

* சிறுமிக்காக வேனை நிறுத்தி உரையாடிய முதல்வர்
தஞ்சை மாவட்டம் பூதலூர் நால்ரோடு ரவுண்டானா பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றபோது, தனியார் ஜவுளிக்கடை ஊழியர் பிரபு (35) என்பவர் தனது மகள் சிவதர்ஷினி (6), சகோதரி மகள் காருண்யா (12) ஆகியோருடன் காத்திருப்பதை கண்டு வாகனத்தை நிறுத்தச் சொன்னார். அப்போது பிரபு ஒரு மனுவை முதல்வரிடம் அளித்தார். அப்போது 2 சிறுமிகளையும் பார்த்து உற்சாகமாக பேசி சிரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வேனில் இருந்து சாக்லெட்டுகளை எடுத்து சிறுமிகளிடம் வழங்கினார்.

*புதுமண தம்பதி ஆசி
திருச்சி மாவட்டம் செங்கரையூரிலிருந்து முதல்வர் புறப்பட்டபோது, அரியூர் கிராமத்தை சேர்ந்த இன்ஜினியர் ரேமண்ட்- வினிதா புதுமண தம்பதியினர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.

The post திருச்சி விமான நிலையத்தில் நெகிழ்ச்சி முதல்வர் அங்கிள்… படிக்க உதவி பண்ணுங்க! சிறுமியின் குரலுக்கு உடனடி ரெஸ்பான்ஸ், கல்வி செலவை ஏற்ற கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: