6 மாத மன நல பட்டயப்படிப்பு முடித்த 46 காவல் அதிகாரிகளுக்கு பட்டய சான்றிதழ்: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்

சென்னை: 6 மாத கால மன நல பட்டயப்படிப்பு முடித்த 46 காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பட்டய சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மன அழுத்த ேமலாண்மை மற்றும் நிறைவாழ்வு பயிற்சியினை வழங்கி வருகிறது.

இப் பயிற்சியின் ஒரு பகுதியாக இன்ஸ்பெக்டர்கள், காவல் நிலைய அதிகாரிகள், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பொதுமக்களுடன் அன்றாடம் பணியாற்றுபவர்கள். ஆகவே இவர்களுக்கு மக்களின் மனம் மற்றும் மன அழுத்த நோய்கள் போன்றவற்றில் புரிதலும், மக்களை சமாளிக்கும் பயிற்சியும் தேவைப்படுகிறது. அதற்காக 76 காவல்துறை பணியாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொண்டதற்கிணங்க, தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் ‘மனநல நிறைவாழ்வு’ பட்டயப்படிப்பு (ஆறுமாத காலம்) பயிற்சி இணைய வழியாக வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்து வெற்றிகரமாக தேர்வு பெற்ற 46 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் ஆகியோருக்கு பட்டயம் வழங்கும் விழா நேற்று காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் டிஜிபி சைலேந்திரபாபு, தேசிய மன நலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் பிரதீமா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பட்டய படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஐஜி(நலன்) நஸ்மல் ஹோடா உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post 6 மாத மன நல பட்டயப்படிப்பு முடித்த 46 காவல் அதிகாரிகளுக்கு பட்டய சான்றிதழ்: டிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: