பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துணை சமரச தீர்வு மையம்: மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்ட துணை சமரச தீர்வு மையம், வழக்கறிஞர்களின் ஆய்வுக்கூடம் ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் திறந்து வைத்தார். தமிழக நீதித்துறையின்கீழ் தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சமரச தீர்வு மையம் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது. இதில் வழக்காடிகளுக்காகவே வழக்கில் சமரசம் ஏற்படுத்தி விரைவாக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், துணை சமரச தீர்வு மையம் மற்றும் வழக்கறிஞர்களுக்கான ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மையம் மற்றும் ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “துணை சமரச தீர்வு மையத்தின் மூலம் விபத்து, குடும்ப நல வழக்கு, தொழிலாளர் நல வழக்கு, நிலம் சம்பந்தப்பட்ட சிவில் பிரச்னைகள், செக் மோசடி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்து தீர்க்கப்படும்” என்றார். சமரச தீர்வு மையம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை நீதிபதிகள் வழங்கினர். நிகழ்ச்சியில், நீதிபதி எஸ்.பாலகிருஷ்ணன், பூந்தமல்லி சட்டப்பணி குழு தலைவர் சார்பு நீதிபதி அலீசியா, நீதிபதிகள் கலையரசி, திவ்யா, வள்ளி மணாளன், அரசு வழக்கறிஞர்கள் கே.பி.புரட்சிதாசன், எஸ்.பாலமுருகன் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

The post பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துணை சமரச தீர்வு மையம்: மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: