லாட்ஜில் இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு நகை திருட்டு: போலி டாக்டருக்கு வலை

சித்தூர்: ரயிலில் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தால் இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்து சென்று மயக்க ஊசி போட்டு நகைகளை திருடிச்சென்ற போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு நேற்று காலை வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. அதில் ஒரு பெட்டியில் 35 வயதுள்ள இளம்பெண் பயணம் செய்தார். அப்போது அதே பெட்டியில் 35 வயதுள்ள ஆணும் பயணம் செய்தார். இளம்பெண்ணிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்ட அந்தநபர், ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் இதய சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறேன் என்று தெரிவித்தார். இதை நம்பிய இளம்பெண் தனக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்படுவதாக கூறினார்.
பின்னர் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருவரும் இறங்கியுள்ளனர். அப்போது அந்த மர்ம நபர், சிகிச்சை அளிப்பதாக கூறி அருகே உள்ள லாட்ஜிக்கு அந்த பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்தப் பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.

ஊசி போட்ட சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கி சாய்ந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர், அவர் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். மாலையில் கண் விழித்த அந்த பெண் தான் அணிந்திருந்த தாலி செயின் மற்றும் தங்க நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தன்னுடன் வந்தவரையும் காணவில்லை. தனக்கு மயக்கஊசி போட்டு ஆறரை சவரன் நகைகளை அந்த மர்ம ஆசாமி திருடிச் சென்றதை அறிந்த இளம்பெண், கோபாலபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகைகளுடன் தப்பி ஓடிய போலி டாக்டரை தேடி வருகின்றனர்.

The post லாட்ஜில் இளம்பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு நகை திருட்டு: போலி டாக்டருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: