தொழுகை ஓர் ஒளி..!

இஸ்லாமிய வாழ்வியல்

மிக அதிக நன்மைகளை- புண்ணியங்களைப் பெற்றுத் தரும் செயல்கள் குறித்து நபிகளார்(ஸல்) கூறினார். ஒரு சிறிய இறைத்துதிச் சொல் வானங்கள் – பூமிக்கு இடையே உள்ள இடத்தை நிரப்பிவிடும் அளவுக்குப் புண்ணியம் சேர்க்கும் என்றார் நபிகளார். என்ன அந்தச் சொல்? இறைத்தூதர் அவர்கள் கூறினார்:

“தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.

“எல்லாப் புகழும் இறைவனுக்கே’’ (அல்ஹம்துலில்லாஹ்) என்று இறைவனைத் துதிப்பது, நன்மை- தீமைகளை நிறுக்கக்கூடிய தராசை நிரப்பக்கூடியதாகும்.

“சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி (இறைவன் தூயவன், அனைத்துப் புகழும் அவனுக்கே உரியது) என்று துதிப்பது, வானங்கள்- பூமிக்கு இடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய அளவுக்கு நன்மைகளைக் கொண்டதாகும்.

“தொழுகை ஓர் ஒளி. தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும்.” (ஆதார நூல்- மிஷ்காத், நபிமொழி எண் 281)

தொழுகை எனும் உயர் வழிபாட்டிற்குத் தூய்மை கட்டாயம். தூய்மை இல்லாமல் எந்த வழிபாட்டையும் செய்ய இயலாது. அங்கத் தூய்மை அல்லது குளிப்புக் கடமையான நிலையில் தொழுகையை நிறைவேற்ற முடியாது. அங்கத்தூய்மை செய்துவிட்டு அல்லது குளித்துவிட்டுத்தான் தொழ வேண்டும். அதனால்தான் நபிகளார், “தூய்மை இறைநம்பிக்கையில் பாதி” என்றார். இது உடல் தூய்மை, உளத்தூய்மை முதல் சுற்றுச்சூழல் தூய்மை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.

இறைத்துதிச் சொற்கள், இறைவனைப் போற்றித் துதிக்கும் சொற்கள் ஆகியவற்றுக்குக் கிடைக்கும் நன்மைகளை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹா இல்லல்லாஹ் போன்ற இறைத்துதிச் சொற்களை நல்ல மரத்திற்கு ஒப்பிட்டுக் குர்ஆன் பேசுகிறது.பூமியில் ஆழமாக வேரூன்றி, வானளாவிய அளவில் கிளைகள் பரப்பி நிற்கும் கனி மரங்கள் மக்களுக்கு எந்தெந்த வகையில் எல்லாம் பயன்தருமோ அதுபோன்றதுதான் இறைத்துதிச் சொற்களும்.

கவலை, துன்பம், இடையூறு ஆகியவற்றை நீக்கி இதயத்திற்கு நிம்மதியையும் அமைதியையும் தரக்கூடிய புண்ணிய சொற்கள் அவை.

“தொழுகை ஓர் ஒளி” என்று குறிப்பிட்டுள்ளர் நபிகளார். மானக்கேடான அனைத்துச் செயல்களிலிருந்தும் தொழுகை ஓர் அடியானைக் காக்கும் கவசம் ஆகும். ஐவேளைத் தொழுகையில் ஆழ்ந்த அக்கறையும் ஈடுபாடும் உள்ளவர்கள் மதுவைத் தொடக்கூட மாட்டார்கள். தீமைகளை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். இந்த வகையில் தொழுகை ஓர் ஒளிவிளக்கு போல் மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அது மட்டுமல்ல, மறுமையிலும் அது ஒளியாக நின்று துணைசெய்யும்.

“இந்த உலகில் நீங்கள் சம்பாதித்த பொருள்களை இறைவழியில் செலவு செய்தீர்களா, ஏழை எளியோர்க்கு வழங்கினீர்களா?” என்று மறுமையில் இறைவன் நிச்சயம் கேட்பான். அப்போது நாம் செய்த தான தர்மங்கள் சான்றாகவும் ஆதாரங்களாகவும் அமைந்து, நமக்கு ஈடேற்றத்தைப் பெற்றுத் தரும்.

“பொறுமை ஒரு வெளிச்சம்” என்று கூறியிருக்கிறார் நபிகளார். பொறுமை என்பது என்ன? சகித்துக்கொள்வது மட்டுமல்ல, நிலைகுலையாமல், கட்டுப்பாட்டுடன் இருப்பதும் பொறுமைதான்.

“சோதனைகளும் கஷ்டங்களும் வரும்போது பொறுமையாக இருக்க வேண்டும்” என்று சொல்வதன் பொருள், அந்தத் துயரமான சந்தர்ப்பங்களிலும் நாம் இறைவன் மீதே நம்பிக்கை கொண்டு, மனச்சோர்வுக்கு ஆளாகாமல், துணிச்சலாக நிலைமைகளை எதிர்கொள்ள வேணடுமே தவிர, எந்தவிதமான தவறான முடிவுகளுக்கும் வந்துவிடக்கூடாது.

இன்னல்களின்போது இறைவனையே சார்ந்து நிற்பவர்களுக்கு, அவர்கள் எதிர்பாராத வகையில், அந்த இன்னல்களிலிருந்து விடுபட சட்டென்று ஒரு வெளிச்சம் கிடைக்கும். நமது அன்றாட வாழ்க்கையிலேயே இந்த அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கும். அதனால்தான் “பொறுமை ஒரு வெளிச்சம்” என்றார் நபிகளார்.

– சிராஜுல்ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

“ஒருவர் முறையாக அங்கத்தூய்மை செய்யும்போது அவருடைய சிறுபாவங்கள் அவருடைய உடலில் இருந்து வெளியேறிவிடுகின்றன.”- நபிமொழி

The post தொழுகை ஓர் ஒளி..! appeared first on Dinakaran.

Related Stories: