இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக குஜராத் நீதிமன்றத்தில் மனுஸ்மிரிதியை வைத்து விட்டார்களா?.. கனிமொழி சோமு கண்டனம்..!

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக குஜராத் நீதிமன்றத்தில் மனுஸ்மிரிதியை வைத்து விட்டார்களா என திமுக எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார். 17 வயதுக்கு முன் திருமணம் , குழந்தைப்பேறு பெரிய விசயமே இல்லை என குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி மனுஸ்மிரிதியை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கனிமொழி சோமு; 14,15 வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம், குழந்தை பேறெல்லாம் பெரிய விஷயமே இல்லை. நம் முன்னோர்கள் 14,15 வயதில் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளவில்லையா என்றதோடு 21ம் நூற்றாண்டில் இதெல்லாம் சாதாரணம் என்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கருவுற்ற பெண்ணின் தந்தை கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி தொடுத்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

கூடவே மனுஸ்மிரிதியை படிக்க சொல்லி அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. நான் மனுஸ்மிரிதியை அல்ல, இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகரித்த மருத்துவ பாடத்திட்டத்தை படித்து மகப்பேறு மருத்துவர் ஆன முறையில் சொல்கிறேன், 14, 15 வயது பதின்பருவ பெண்ணுடல் ஒரு குழந்தையை தாங்கும் திறன் படைத்ததல்ல.. முன்பு கல்வி அறிவு, அறிவியல் அறிவின்றி நடைபெற்ற குழந்தை திருமணங்களால் குழந்தையே குழந்தையை சுமந்து இறந்த பெண்களின் எண்ணிக்கைக்கு தரவுகள் கூட இங்கே முறையாக இல்லை. அப்படி சிறு வயதில் குழந்தை பேறு பெற்ற பெண்கள் உடல் ரீதியாக அடைந்த பாதிப்புகள் ஏராளம். அதையெல்லாம் அவர்கள் சொல்லவில்லை, சொல்லவேண்டும் என்று கூட தெரியாத மனுஸ்மிரிதி காலம்.

ஆனால் அந்த மனுஸ்மிரிதிக்கு மாற்றாக பல்வேறு அரசியல் முன்னெடுப்புகள், போராட்டங்கள், பகுத்தறிவு பார்வை கொண்டு எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், திருமண வயது 18 என்று தானே சொல்கிறது? குஜராத் என்பதற்காக நீதிமன்றங்களில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக மனுஸ்மிரிதியை எல்லாம் வைத்து விட்டார்களா என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மாற்றாக குஜராத் நீதிமன்றத்தில் மனுஸ்மிரிதியை வைத்து விட்டார்களா?.. கனிமொழி சோமு கண்டனம்..! appeared first on Dinakaran.

Related Stories: