பசுமை திட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் தயார்: 9 மாவட்டத்தில் நடவு செய்ய மரகத பூஞ்சோலைகள் அமைப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 9: பசுமை திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடவு செய்ய 6 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை போர்வை அதிகரிக்க கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் 2022-23ம் ஆண்டில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ், ₹2 கோடியே 43 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 56 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2022-23ம் நிதியாண்டில் ₹19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மரக்கன்றுகள் பட்டா நிலங்களில் நடவு செய்ய வேளாண்மைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-24ம் நிதியாண்டில் கூசுமலை மத்திய நாற்றங்கால் மையம், போலுப்பள்ளி மத்திய நாற்றங்கால் மையங்களில், பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தில் நாவல், மாககனி, புங்கன், வேம்பு, அத்தி, பூவரசன், வேங்கை, ஆலமரம், செண்பகம், பலா, ஜெம்புநாவல், இலுப்பை மரம், செம்மரம் என ஒரு லட்சத்து 98 ஆயிரம் மரக்கன்றுகளும், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் திட்டத்தில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 953 மரக்கன்றுகளும் ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வனத்துறை சமூக காடுகள் மற்றும் விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த நிதியாண்டில் மாநில அளவில் வனத்தையொட்டியுள்ள 100 கிராமங்களில் மரகத பூஞ்சோலைகள் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பசுமை போர்வையை அதிகரிக்க தலா ₹23 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் கும்மனூர், தானம்பட்டி, எண்ணேக்கோல், ஆவலக்கம்பட்டி மற்றும் மாரம்பட்டி ஆகிய 5 கிராமங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் மரகத பூஞ்சோலை அமைக்க ₹ஒரு கோடியே 19 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் பணிகள் நடைபெற்றது. இந்த மரகத பூஞ்சோலைகள் உள்ளூர் கிராமத்தின் மரம் மற்றும் ஊரக விறகு தேவைகளை நிறைவேற்றுவதுடன், நீர் நிலைகளை மேம்படுத்தி, சூழலியல் சேவைகளை வழங்குவதோடு பல்வேறு பொழுது போக்கு வசதிகளையும் வழங்கும். கிராமத்தில் பொது நலனுக்காக உள்ளூர் சமூக இந்த சோலைகளில் இருந்து பொது பயன் உரிமைகள் பெறும் வகையில் இந்த மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின், கோட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தின் மூலம் கும்மனூர், எண்ணேகொல், தானம்பட்டி, மாரம்பட்டி, ஆவலக்கம்பட்டி ஆகிய 5 கிராமங்களில் மரகத பூஞ்சோலை அமைக்கப்பட்டு தற்போது திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, கிருஷ்ணகிரி சமூக காடுகள் மற்றும் விரிவாக்க கோட்டத்தில் பசுமை தமிழ்நாடு திட்டம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு, கால நிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தின் கீழ் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய தயார் நிலையில் உள்ளது.

மேற்படி மரக்கன்றுகள் இக்கோட்டத்தில் போலுப்பள்ளி, கூசுமலை, பேரண்டப்பள்ளி, மாதேப்பள்ளி, நாகதொணை மற்றும் பையனப்பள்ளி ஆகிய மத்திய நாற்றங்கால்களில் சந்தனம், சிவப்பு சந்தனம், மகாகனி, வேங்கை, ஈட்டி, தேக்கு, சில்வர்ஓக், மலைவேம்பு, பூவரசன், பலா, புளியன், ஜம்புநாவன், வேம்பு, புங்கன், அத்தி, அரசன், பாதாம், நீர்மத்தி கொய்யா, மாதுளை, எலுமிச்சை மற்றும் நெல்லி ஆகிய மரக்கன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் உள்ளது.

இக்கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால் பாரஸ்ட் சர்வே ஆப் இந்தியா 2019ன்படி, காப்புக்காட்டிற்கு வெளியே 68.41 சதுர கி.மீ பசுமைபோர்வை உற்பத்தி செய்வதற்கு இக்கோட்டத்தின் செயல்பாடே முக்கிய காரணமாகும். விவசாய நிலங்கள், கல்வி நிலையங்கள், கோயில்கள், தொழிற்சாலை வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு நிலயங்கள், நெடுஞ்சாலை மற்றும் கிராம சாலைகளின் ஒரங்களில் மரக்கன்றுகள் வனத்துறை மூலம் நடவு செய்து கொடுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தொழில்நுட்ப உதவியாளர்களை 8778294739, 9442825159 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

The post பசுமை திட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் தயார்: 9 மாவட்டத்தில் நடவு செய்ய மரகத பூஞ்சோலைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: